அசாம் முதல்வராக மீண்டும் தேர்வு; மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா
குவஹாத்தி: அசாமின் முதல்வராக இரண்டாவது முறையாக பா.ஜ.,வின் ஹிமந்த பிஸ்வ சர்மா நாளை பதவியேற்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு, கடந்த மாதம் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. இதில், பா.ஜ., 82 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளான அசோம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவை தலா 10 இடங்களில் வென்றன. இதையடுத்து, 102 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது.
இதன் வாயிலாக அசாமில் ஹாட்ரிக் வெற்றியை பா.ஜ., பதிவு செய்துள்ளது. இதையடுத்து, முதல்வராக இருந்த ஹிமந்த பிஸ்வ சர்மா, கடந்த 6ம் தேதி தன் ராஜினாமா கடிதத்தை கவர்னர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்து அளித்தார். தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் குவஹாத்தியில் நேற்று நடந்தது.
அசாம் மாநிலத்துக்கான கட்சியின் மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் நட்டா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடந்தது.
இதில், பா.ஜ.,வின் சட்டசபை தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி கட்சிகளும், அவரை தலைவராக தேர்வு செய்யும் முடிவை ஏகமனதாக ஆதரித்தன.
அசாமில் முதன்முறையாக பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், சர்மாவின் தலைமைத்துவத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, இரண்டாவது முறையாக அவர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அசாமில் தே.ஜ., கூட்டணி ஆட்சியமைக்க கவர்னர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்து ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று உரிமை கோரினார்.
இதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு விழா நாளை நடக்கிறது. குவஹாத்தியில் உள்ள கால்நடை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கும் விழாவில், ஏற்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இவருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.,க்களுக்கு சர்மா நன்றி தெரிவித்தார்.
கடந்த 2015ல் காங்கிரசில் இருந்து வெளியேறி, பா.ஜ.,வில் இணைந்த ஹிமந்த பிஸ்வ சர்மா, அக்கட்சி தொடரந்து மூன்றாவது முறையாக அசாமில் பொறுப்பேற்க முக்கிய காரணமாக விளங்குகிறார். பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல்களில் வெற்றி பெற இவரின் பங்கு முக்கியமானது என கூறப்படுகிறது.