வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்

தேனி: தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று (மே12) துவங்குகிறது.

இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,22 கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி அம்மனை வழிபட்டு சென்று வருகின்றனர்.

அம்மன் விரத காலத்தில் இருப்பதால் கம்பத்திற்கு மட்டும் தெள்ளுமாவு படையல் வைத்து பூஜை மட்டும் நடந்து வருகிறது.

இத்திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்கள், கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் வருவர். இன்று திறக்கப்படும் அம்மன் சன்னதி நடை மே 19 இரவு வரை திறந்திருக்கும். பக்தர்கள் பகல், இரவு என ஏழு நாட்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்திருவிழா மே 15 மாலை நடக்கிறது. மே 18ல் தேர் நிலைக்கு வருகிறது. மே 19 இரவு அம்மன் ஆபரண பெட்டிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மே 20 காலை மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் கோயில் வீட்டில் எழுந்தருளுகிறார்.

இத்திருவிழாவிற்காக திண்டுக்கல், மதுரையில் இருந்து வீரபாண்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பாதுகாப்பு பணியில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement