சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம் அரசாணை வெளியீடு
சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்திற்கு, டி.ஜி.பி., அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நியமிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதல்வராக விஜய் பதவியேற்றதும், பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை செயல்படுத்துவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
அந்த திட்டத்தை செயல்படுத்தும்படி, டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட், அரசுக்கு பரிந்துரைத்தார். அதை ஏற்று, உள்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணை:
குற்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்ற சம்பவங்கள் நடக்காமல், சிங்கப்பெண்கள் சிறப்பு படையினர் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவர்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உட்பட, பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் தங்கள் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களை தடுப்பர்.
புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பர். பாதிக்கப்பட்ட பெண்களை மீட்பது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன், மற்ற ஆதரவுகள் கிடைப்பதற்கான வழி வகைகளை உரிய நேரத்தில் வழங்குவர். சமூக நலம், கல்வித்துறை, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.
சமூகத்தில் பல தரப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபடுவர். பெண்கள் பாதுகாப்பை ஒற்றை இலக்காக வைத்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படுகிறது.
முதற்கட்டமாக டி.ஜி.பி., அலுவலகத்தில், ஒரு ஜ.ஜி., கண்காணிப்பாளர், இரண்டு துணை கண்காணிப்பாளர், நான்கு இன்ஸ்பெக்டர்கள், எட்டு சப் - இன்ஸ்பெக்டர்கள், 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.