டெங்கு உற்பத்தியை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: 'தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் நிலவுவதால், டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் நிலவுகிறது. திடீரென மழை பெய்வதும், வெயில் அடிப்பதும் தொடர்கிறது.

இது, டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெங்கு கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் பதிவாகும் டெங்கு பாதிப்பு இடங்களைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளை, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வீடுகளில் நன்னீர் தேங்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டெங்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement