புதுச்சேரி வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடுவார்கள்

புதுச்சேரி: புதுச்சேரி வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில், விளையாடுவார்கள் என, கிரிக்கெட் சங்க நிர்வாகி பாபு தெரிவித்தார்.

புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் சார்பில், நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், சங்க நிர்வாகி பாபு கூறியதாவது; 58 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எங்கள் சங்கத்திற்கு டெத் சான்றிதழ் வழங்க யாருக்கும் உரிமை இல்லை. அந்த வகையான வார்த்தைகளை பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களது நோக்கம் புதுச்சேரி வீரர்கள் முன்னேறக் கூடாது என்பது தான். வெளி மாநில வீரர்களை கொண்டு வந்து விளையாட வைப்பதே அவர்களின் திட்டமாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே எங்கள் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வந்துள்ளார். பி.பி.எல்., நடத்துவதற்கான அனைத்து அங்கீகாரமும், உரிமையும் எங்களிடமே உள்ளது.

விரைவில் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் பி.பி.எல்., போட்டிகள் நடக்க உள்ளன. புதுச்சேரியில் ஐந்து ஆண்டுகள் வசித்தவர்களே விளையாட முடியும் என்ற விதிமுறை இருக்கும்போதும், அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வீரர்களை கொண்டு வந்து புதுச்சேரிக்காக விளையாட வைத்துள்ளனர். ஆனால் எங்கள் தலைவரின் மூலம் புதுச்சேரி வீரர்கள் இந்திய அளவிலான போட்டிகளில் விளையாடுவார்கள்’ என்றார்.

நிகழ்ச்சியில் ரீகன் ஜான்குமார், துரைசாமி, பிரபாகரன், கலைமணி, சிவக்குமார், காமராஜ், மைக்கல், தாமோதரன், தணிகமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement