திருப்புத்துார் வழிபாட்டு தலம் அருகில் மதுக்கடை அதிகாரிகள் அகற்றுவார்களா: பக்தர்கள் எதிர்பார்ப்பு
திருப்புத்துார்,மே 13-
தமிழக முதல்வர் விஜய் முதல் கட்டமாக 717 மதுபானக் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளதை அடுத்து திருப்புத்துார் காரைக்குடி ரோட்டிலுள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
டாஸ்மாக் நடத்தும் மதுபானக் கடைகளில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட முதல்வர் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றிலிருந்து 500 மீ. தொலைவில் உள்ள கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வை அடுத்த 15 நாட்களுக்குள் அதிகாரிகள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளின்படி திருப்புத்துார் காரைக்குடி ரோட்டில் உள்ள மதுபானக்கடையை மூட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருத்தளிநாதர் கோயில் அருகிலுள்ள மதுபானக் கடையால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருந்ததோடு, வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறாகவும இருந்தது. இக்கடைக்கு அருகாமையில் திருத்தளிநாதர் கோயிலின் நான்காம் பிரகாரத்தை மதுபானம் அருந்துபவர்கள் பயன்படுத்த துவங்கினர். அருகிலுள்ள சீதளி தெப்பக்குளத்தின் படித்துறையையும் மதுபானக் கூட ‛பார்’ ஆக சமூக விரோதிகள் பயன்படுத்த துவங்கினர். இதனால் படித்துறைக்கு பெண்கள் செல்லவே அச்சப்பட்டனர். இரவிலும் இவர்களின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகரித்தது. இதனால் இந்த மதுபானக்கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
தற்போது முதல்வர் உத்தரவின்படி இந்த மதுக்கடையை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இக்கடைக்கு அருகாமையில் 100 மீட்டருக்குள் பஸ் நிலையம், நடுநிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடங்கள் உள்ளன. மேலும் வெகு அருகாமையில் இருபுறமும் திருத்தளிநாதர் கோயில், நின்ற நாராயணப் பெருமாள் கோயில், அமல அன்னை ஆலயம், முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல வழிபாட்டு தலங்கள் உள்ளன. முதல்வர் அறிவித்த விதிகளின்படி இக்கடையை அதிகாரிகள் அகற்றுவார்கள் என பொதுமக்கள் நம்புகின்றனர்.
மேலும்
-
உதகையில் துவங்கியது 128வது மலர் கண்காட்சி
-
பயணிகளுடன் சென்ற ரயிலில் திடீரென பற்றியது தீ; பீஹாரில் அதிர்ச்சி
-
அமெரிக்காவில் வான் சாகச நிகழ்வில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து
-
இருந்த அடையாளமே இருக்காது; ஈரான் வரைபடத்தை குறிவைத்து எச்சரிக்கும் டிரம்ப்
-
விஜய் முதல்வரானதில் எனக்கு பொறாமை இல்லை: நடிகர் ரஜினி பேட்டி
-
அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி இழுபறி ஏன்?