ஊட்டியில் துவங்கியது மலர் கண்காட்சி


உதகை: நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது.


ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இவர்களை மகிழ்விக்கும் விதமாகவும், மாநிலத்தின் சிறப்புகளை விவரிக்கும் விதமாக, அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 128வது உதகை மலர் கண்காட்சி இன்று துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, புதிய ரக ஆர்னமென்டல்கேல், ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள், டெல்பினியம், ஆந்தூரியம் உள்பட 275 வகையான விதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்பட பிற நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில், சுற்றுலாப் பயணிகளின் கண்களை கவரும் வகையில் மலர்கள் குலுங்குகின்றன.

இத்தாலியன் கார்டன் பகுதியில் ஏற்கனவே மலர்களால் அருவி அலங்காரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கார்னேசன் மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கான பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி மாளிகைகளில் மலர் செடிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மரபுகள் குறித்த 30 மலர் அலங்காரங்கள் வண்ண மயமாக உள்ளன.


தோட்டக்கலை துணை இயக்குனர் பெபீதா கூறுகையில், "மலர் கண்காட்சியில் தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களின் பெருமையை விளக்கும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அலங்காரம் உட்பட 30 க்கும் மேற்பட்ட அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளன," என்றார்.

மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement