காரமடையில் ரயில் பாலத்தின் கீழ் சாலை அமைக்க வேண்டும்
மேட்டுப்பாளையம்: இரண்டு கிலோமீட்டர் சுற்றிச் செல்வதற்கு பதிலாக, ரயில் பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்ல சாலை அமைக்க, காரமடை நகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஆகஸ்ட் மாதம் ஒன்பது ரயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளன. இதற்காக காரமடை ரயில்வே ஸ்டேஷனில், ரயில் பாதைகள் மற்றும் பிளாட்பாரங்கள் விஸ்தரிப்பு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக செயல்பாட்டில் இருந்து வந்த, தோலம்பாளையம் ரயில்வே கேட் நிரந்தரமாக அடைக்கப்பட்டது. இவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், புதிதாக கட்டிய ரயில்வே மேம்பாலம் வழியாக செல்லும்படி அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால், ரயில் பாதை அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளின் மக்கள், கேட் வழியாக குனிந்து ரயில் பாதையை கடந்து, நடந்து செல்கின்றனர். வாகனங்களில் செல்வோர் காரமடை நகருக்கு இரண்டு கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ரயில் பாலத்தின் அடியில் வாகனங்கள் செல்ல, புதிதாக சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காரமடை குந்தா நகர் பகுதி மக்கள் கூறியதாவது:
காரமடை தோலம்பாளையம் ரயில்வே கேட்டின் மேற்கு பகுதியில், ரயில் பாதையின் அருகே குந்தா காலனி, திரு.வி.க., நகர், மகாலட்சுமி நகர், சமயபுரம், காமராஜ் நகர், டி.ஆர்.எஸ்., நகர், பூம்புகார் நகர், மகாத்மா காந்தி நகர், மணி நகர் உட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளை சேர்ந்த மக்கள், அரை கிலோமீட்டரில் உள்ள, காரமடை நகர் பகுதிக்கு, தோலம்பாளையம் ரயில்வே கேட்டை கடந்து சென்று வந்தனர். தற்போது ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால், அரை கிலோமீட்டரில் செல்ல வேண்டிய காரமடை நகருக்கு, புதிய ரயில்வே மேம்பாலம் வழியாக, இரண்டு கிலோமீட்டர் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மகாலட்சுமி நகருக்கும், பெரியார் நகருக்கு இடையே ரயில் பாதையின் குறுக்கே, ரயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள் செல்லவும், மக்கள் நடந்து செல்லவும், சாலை அமைக்க, காரமடை நகராட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குந்தா காலனி மக்கள் கூறினர்.
மேலும்
-
திருப்புத்துாரில் குரங்குகள் அட்டகாசம் அதிகரிப்பு; கட்டுப்படுத்த முடியாமல் பெண்கள் தவிப்பு
-
பிரதமரின் கவுரவ நிதியை பெறநில உடைமை பதிவு அவசியம்
-
இதுதான் தூய்மையா? தவறான பாதையில் தவெக: வருத்தம் அளிக்கிறது என்கிறார் இபிஎஸ்
-
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
-
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி; விஜய் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி ஜோதிடர் ரதன் பண்டிட் நியமனம் வாபஸ்