முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி ஜோதிடர் ரதன் பண்டிட் நியமனம் வாபஸ்

41

சென்னை: முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்ட உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற்றது.

தேர்தலில், 'தமிழக வெற்றிக் கழகம் சாதிக்காது' என பலரும் கூறினர். ஆனால், 'த.வெ.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்' என, விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணித்தரமாக கூறினார். ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பே, விஜய் வீட்டிற்கு பூங்கொத்துடன் சென்று வாழ்த்து கூறினார்.

அவர் கணித்தது போலவே, த.வெ.க., எதிர்பாராத வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய கட்சிகள் கூட அதிருப்தியை தெரிவித்தன.

தேசிய அளவிலும், தமிழக அளவிலும் அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது. இன்று சட்டசபையில் பேசிய பிரேமலதா உள்ளிட்ட சிலரும் இந்த நியமனம் பற்றி கேள்வி எழுப்பினர்.
பதில் அளித்துப் பேசிய முதல்வர் விஜய், 'நான் அது பற்றி மீண்டும் யோசனை செய்கிறேன்' என்று கூறியிருந்தார். சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றவுடன் முதல் வேலையாக, அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.



யார் இந்த ரிக்கி ரதன் பண்டிட்?



* 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடம், எண் கணிதம் ஆகியவற்றில் பெரிய அனுபவம் கொண்டவர். இவர், 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 140 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்தார்.

* பண்டிட் வெற்றிவேல் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு டில்லிக்கு குடிபெயர்ந்த பிறகு, ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என மாற்றிக் கொண்டார்.

* இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சில சமயங்களில் ஜோதிடம் பார்த்ததாக சொல்லப்படுகிறது.

Advertisement