வலிநீக்கியல் சிகிச்சை பிரிவில் கூடுதல் டாக்டர்கள் வலிக்கு வரவேற்பு சிகிச்சை பெறுவோர் 3 மடங்காக அதிகரிப்பு
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள், புதிய கருவி வரவால் வலி நீக்கவியல் பிரிவில் தற்போது மூன்று மடங்கு அதிகமான நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மயக்கவியல் துறையின் கீழ் 2009 முதல் வலிநீக்கியல் பிரிவு புற்றுநோயாளிகளுக்கான வலி நீக்கியல் மையமாக செயல்பட்டது.
அதன் பின், நாள்பட்ட வலியால் அவதிப்படும் கை, கால், கழுத்து, முதுகு, இடுப்புவலி, தலைவலி நோயாளிகளுக்காக சிகிச்சை விரிவுபடுத்தப்பட்டது. எல்லா வகை நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை முறை தேவைப்படாது. சிலருக்கு ஒருமுறை சிகிச்சையே போதுமானதாக இருக்கும். மருந்து, மாத்திரை இன்றி, அறுவை சிகிச்சை இன்றி செயல்படுத்தப்படும் மருத்துவ முறை இது. பக்கவிளைவும் இருக்காது.
வலிநீக்கியல் துறை டாக்டர்கள் ஜடாமுனி, கார்த்திக்குமார் கூறியதாவது:
நோயாளிகளை பரிசோதித்தபின் வலிநீக்கியல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை குறிப்பிட்ட நாளில் வரச் சொல்லி உள்நோயாளியாக தங்க வைக்கப்படுவர். அறுவை சிகிச்சை அரங்கில் சிறிய ஊசி மூலம் வலியை உருவாக்கும் நரம்பின் செயல்பாட்டை நிறுத்துகிறோம். இதனால் அப்பகுதியில் உள்ள சதையோ, பிற உறுப்புகளோ பலவீனப்படாது. இதனால் வலி முழுமையாக நீக்கப்பட்டு நோயாளிகளின் அவஸ்தை குறைக்கப்படுகிறது. மாத்திரைகள் போடவேண்டியதில்லை என்பதால் பக்கவிளைவும் குறைகிறது.
பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விபத்திலோ, கீழே விழுந்து அடிபட்டாலோ, வேறு காரணங்களாலோ வலி குறையாமல் இருக்கும். அவர்களுக்கு இச்சிகிச்சை வரப்பிரசாதமாக இருக்கும். ஆனால் சிறு குழந்தைகளுக்கு கூட புற்றுநோய் பாதிப்பு இருப்பதால் அவர்களுக்கும் இச்சிகிச்சை பலன் தரும். அந்தந்த துறை டாக்டர்கள் நோய்க்கு சிகிச்சை அளிப்பர். இங்கு வலியை குறைப்பது மட்டுமே எங்கள் வேலை. புற்றுநோயாளிகள் எந்நேரமும் வலியை அனுபவிப்பதை தடுக்க முடியும்.
கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது குழந்தைக்கு ரேடியோ அதிர்வெண் சிகிச்சை மூலம் வலியை நீக்கியுள்ளோம்.
சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் முதுகெலும்பில் புற்றுநோய் பரவி முதுகெலும்பு உடைந்த நிலையில் வலியுடன் சிகிச்சைக்கு வந்தார். சிறுநீரகத்துறை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்ட அதேநேரத்தில் வலிநீக்கியல் துறை சார்பில் 'வெர்டிப்ரோ பிளாஸ்டி' முறையில் முதுகெலும்பு அடைக்கப்பட்டு வலிநீக்கியல் சிகிச்சையும் செய்யப்பட்டது. புற்றுநோயால் ஏற்பட்ட வலியை குறைக்கமுடிவதே சிகிச்சையின் பயன்.
வலி அதிகமாக இருப்பவர்கள் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுவதால் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். வலியில்லாமல் வாழ வேண்டும் என்பதே சிகிச்சையின் நோக்கம். ரூ.30 லட்சம் மதிப்பில் ஆர்.எப்.ஏ., எனப்படும் ரேடியோ அதிர்வெண் நீக்க கருவி சமீபத்தில் வாங்கப்பட்டது. இக்கருவியின் மூலம் மூளைக்கு வலியை அனுப்பும் நரம்பின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. உடல் இயக்க செயல்பாட்டுக்கான நரம்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இத்துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற மூன்று டாக்டர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எப்.ஏ., கருவியும் வாங்கப்பட்டதால் மாதம் 10 பேருக்கு சிகிச்சை அளித்த நிலையில் தற்போது 40 பேருக்கு வலிநீக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனர்.
மேலும்
-
குடியுரிமை விதிகளில் மாற்றம்; பாகிஸ்தான் உள்பட 3 நாட்டவர்கள் பாஸ்போர்ட் விபரங்களை சமர்பிக்க உத்தரவு
-
மே23ல் திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்; உதயநிதி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்
-
அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள் கூட்டம்; எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை
-
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்; இன்று இத்தாலி பிரதமர் மெலோனியுடன் சந்திப்பு
-
2029ல் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்: சீமான் திட்டவட்டம்