35 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று தற்காலிக ரத்து

தாம்பரம், மே 17–

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 440 தனியார் பள்ளி வாகனங்கள், நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இதில், பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, 35 வாகனங்களில் தகுதி சான்று தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது.

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில், 541 தனியார் பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. புதிய கல்வி ஆண்டு தொடங்க உள்ளதை ஒட்டி, இந்த வாகனங்களுக்கான கூட்டு ஆய்வு நேற்று நடத்தப்பட்டது.

மண்ணிவாக்கத்தை அடுத்த கரசங்காலில், தாம்பரம் கோட்டாட்சியர் முரளி, தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வில், 440 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வேக கட்டுப்பாட்டுக் கருவி, அவசர கால வழி, வாகனத்தின் முன் – பின் கண்காணிப்பு கேமரா, முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்புக் கருவி உட்பட வாகனத்தின் தரம் குறித்தும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்ட, 35 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது.

மேலும், கண்டறியப்பட்ட குறைபாடுகளை முழுமையாக சரிசெய்து, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே, அந்த வாகனங்களை இயக்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அறிவுறுத்தினர்.

Advertisement