கல்லுாரி விடுதியில் கஞ்சா விற்ற மாணவர் உட்பட 3 பேர் கைது
செம்மஞ்சேரி: ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்த, தனியார் கல்லுாரி மாணவர் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், ஆந்திரா மாநிலம், குர்னுால் மாவட்டத்தை சேர்ந்த ஷேக் முகம்மது ஆரிப், 22, இரண்டாம் ஆண்டு சிவில் இஞ்சினியரிங் படித்து வருகிறார்.
கல்லுாரி விடுதியில் தங்கியுள்ள இவர், சொந்த ஊரில் வசிக்கும் நண்பர்களான மவுலா, 22, ஷேக் முகம்மது கோஷி, 20, ஆகியோருடன் சேர்ந்து, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் வெளி நபர்களுக்கு விற்பனை செய்து வந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார், நேற்று முன்தினம் மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா கடத்தலில், வேறு மாணவர்களும் ஈடுபட்டுள்ளனரா என, மாணவர்கள், விடுதி ஊழியர்களிடம், தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.