முதியவர் வீட்டில் நகைகள் திருடிய தாய், மகள் கைது

கோயம்பேடு: நெற்குன்றம், அருள்மிகு மீனாட்சி நகர் ஒன்றாவது தெருவில் வசிப்பவர் பிரகலாதன், 70. இவரது மகள் மகேஸ்வரி, 50, கணவருடன் ஏற்பட்ட தகராறால், மகன், மகளுடன் இங்கேயே தங்கியுள்ளார்.

கடந்த மாதம் 30ம் தேதி, பிள்ளைகளுடன் சுற்றுலா சென்ற மகேஸ்வரி, கடந்த 8ம் தேதி வீடு திரும்பினார். பீரோவில் வைத்திருந்த வைர கம்மல், தங்க வளையல், கைச் செயின், மோதிரம் என 6.5 சவரன் நகைகள் மற்றும் 10 கிராம் வெள்ளி காசு திருடுபோனது தெரியவந்தது.

கோயம்பேடு போலீசார் விசாரணையில், மகேஸ்வரியின் தந்தை பிரகலாதனை சந்திக்க, கடந்த மாதம் 30ம் தேதி, ஏற்கனவே பழக்கமான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சத்யா, 38, அவரது மகள் ஹேமலதா, 20, ஆகியோர், வீட்டிற்கு வந்தது தெரியவந்தது.

அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, பீரோவில் இருந்த நகைகள் மற்றும் வெள்ளி காசு திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். நேற்று முன்தினம், போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 30 கிராம் தங்க நகைகள் மற்றும் 10 கிராம் வெள்ளி காசு மீட்கப்பட்டது.

Advertisement