சட்டவிரோதமாக ஓட்டு போட்டுவிட்டு அமெரிக்கா செல்ல முயன்றவர் கைது

சென்னை:தமிழகத்தில், கடந்த ஏப்., 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டு பதிவின் போது, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பலர், சட்டவிரோதமாக ஓட்டு போட்டதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் சென்றது.

இதையடுத்து, சர்வதேச விமான நிலையங்களில் உள்ள குடியுரிமை துறைக்கு தகவல் தெரிவித்த தேர்தல் கமிஷன், கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிட்டது.

விமானங்களில் பயணிக்க வரும் வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்களின் கைவிரல்களை கண்காணித்து, ஓட்டளித்த அடையாள மை இருந்தால், அவர்களை விசாரணை செய்யவும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, சென்னை, மதுரை விமான நிலையங்களில், சில தினங்களுக்கு முன் நடத்திய அதிரடி சோதனையில், வெளிநாடு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் 17 பேர், சட்டவிரோதமாக ஓட்டு போட்டுவிட்டு, வெளிநாடு செல்ல இருந்த போது பிடிபட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், சென்னையில் இருந்து துபாய்க்கு, இரவு 10:00 மணிக்கு செல்லும் 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணியரை, குடியுரிமை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

அப்போது, சென்னை கே.கே., நகரில் வசிக்கும் கிஷோர், 64, என்பவரின் கையில், 'மை' இருந்தது. அவரிடம் விசாரித்ததில், சட்டவிரோதமாக ஓட்டு போட்டு விட்டு, துபாய் வழியாக அமெரிக்க செல்ல இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கிஷோரை கைது செய்த குடியுரிமை அதிகாரிகள், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவரை ஒப்படைத்தனர்.

Advertisement