ஏ.டி.எம்.,மில் நிரம்பும் பணத்தில் ரூ.25 லட்சம் திருடிய ஓட்டுநர் கைது

வேளச்சேரி:ஏ.டி.எம்.,மில் நிரப்ப கொண்டு சென்ற பணத்தில், 25 லட்சம் ரூபாய் திருடி, மனைவி, தாயார் வங்கி கணக்கில் சேர்த்த வாகன ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர்.

வேளச்சேரி, டான்சி நகரில் உள்ள 'ஹிட்டாச்' என்ற நிறுவனம், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணி செய்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக, வாகனத்தில் கொண்டு சென்ற பணம் குறைந்தது.

வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, வாகன ஓட்டுநரான விருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த விக்னேஷ்குமார், 26, என்பவர் பணத்தை திருடியது தெரிந்தது.

இது தொடர்பாக, நிறுவன மேலாளர் அரவிந்தன், 44, வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார், நேற்று விக்னேஷ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் கூறியதாவது:

ஏ.டி.எம்.,மில் நிரப்பும் பணத்தை வாகனத்தில் கொண்டு செல்லும்போது, ஓட்டுநர், பணம் நிரப்பும் ஊழியர் மற்றும் துப்பாக்கி ஏந்திய ஒரு காவலர் உடன் இருப்பர்.

ஊழியரும், காவலரும் ஏ.டி.எம்., சென்று கதவை மூடி விட்டு இயந்திரத்தில் தேவையான பணத்தை நிரப்புவர். இதற்கு, 15 முதல் 25 நிமிடங்கள் ஆகும்.

அந்த நேரத்தில், ஓட்டுநரான விக்னேஷ்குமார், வாகனத்தில் இருந்த பணத்தை கொஞ்சம், கொஞ்சமாக திருடியுள்ளார். பத்து நாட்களில், 25 லட்சம் ரூபாய் திருடியுள்ளார்.

இதில், 8 லட்சம் ரூபாயை, நிறுவனத்திடம் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை, மனைவி, தாயார் வங்கி கணக்கில் வைத்துள்ளார். அந்த வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திருட்டில், நிறுவனத்தில் பணிபுரியும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என, விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement