தாமதமாகும் கோடை கால மழை:   வறண்டன குளங்கள் 

உடுமலை: கோடை கால மழை பெய்யாததால், உடுமலை பகுதியிலுள்ள, குளங்களின் நீர்மட்டம் சரிந்து, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, 38 ஊராட்சிகளில், 118 குளம், குட்டைகள் உள்ளன. குடிமங்கலம் ஒன்றியத்தில், 74 குளங்கள் உள்ளன. இதில், 67 குளங்கள், மத்திய அரசின், 'ஜல் சக்தி' திட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன் துார்வாரப்பட்டன.

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை நீண்ட நாட்களாக நீடித்து, குளங்களுக்கு நீர் வரத்து கிடைத்தது. பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசன பகுதியிலுள்ள குளங்கள், நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதனால், நிலத்தடி நீர மட்டமும் உயர்ந்தது. கடந்த சில மாதமாக, மழை பெய்யாமல், கோடை வெயில் முன்னதாகவே துவங்கி கொளுத்துகிறது. கோடை கால மழையும் பெய்யவில்லை.

இதனால், இரு ஒன்றியங்களிலும், 50க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமான குளங்கள் தண்ணீரின்றி வறண்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டமும் பாதித்துள்ளது.

கிணறு மற்றும் போர்வெல்களில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். உள்ளூர் குடிநீர் ஆதாரங்களான போர்வெல்களில் இருந்து குடியிருப்புகளுக்கு தண்ணீர் வினியோகிப்பதும் பாதித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்கினால் மட்டுமே, வறட்சியிலிருந்து தப்ப முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

விவசாயிகள் கூறியதாவது: கிராம குளங்கள் மட்டுமே நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளன. இந்தாண்டு மழை தாமதித்து வருவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

பி.ஏ.பி., பாசனத்துக்கு மண்டல வாரியாக, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஒவ்வொரு மண்டல பாசனத்தின் போதும், குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் நிலையாக இருக்கும்; சாகுபடி பணிகளும் பாதிக்காது. இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement