கார், ஸ்கூட்டர் மீது அரசு பஸ் அடுத்தடுத்து மோதல்: புதுச்சேரி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

கோட்டக்குப்பம்: புதுச்சேரி அருகே இ.சி.ஆரில், அதிவேகமாக வந்த அரசு சொகுசு பஸ், கார் மற்றும் ஸ்கூட்டர் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஸ்கூட்டரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மண்டவாய்ப்பு புதுக்குப்பம் அடுத்த ஆலம்பாக்கத்தை சேர்ந்தவர் சேஷாத்ரி மகன் சிலம்பரசன், 29; திருமணம் ஆகாதவர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் காயமடைந்தார். அதையொட்டி, புதுச்சேரி அருகே அபிேஷகப்பாக்கத்திற்கு கட்டு போடுவதற்காக அழைத்து செல்ல குடும்பத்தார் முடிவு செய்தனர். அதன்படி (மே 17) அதிகாலை 3:30 மணிக்கு, சிலம்பரசனின் 2 சகோதரிகளின் கணவர்களான கடலுார் பழையபட்டிணத்தை சேர்ந்த ஸ்டாலின், 37; காலாப்பட்டு கணபதிச்செட்டிக்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன், 33; இருவரும், சிலம்பரனை ஸ்கூட்டரில் (டி.என்.31-பி.எப்9109) அமர வைத்து, மூவரும் சென்றனர்.

காலை 4:00 மணியளவில், இ.சி.ஆரில், பெரியமுதலியார்சாவடி கலால் சோதனை சாவடி அருகே சென்றனர். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு சொசுகு பஸ் (டி.என்01-ஏஎன் 2597), டாடா ஹரியர் கார் (ஓடி01-எஸ்3620) மீது மோதியது. அடுத்து, ஸ்டாலின் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீதும் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், சிலம்பரசன், ஸ்டாலின், கார்த்திகேயன் மூவரும் பஸ்சின் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ்சின் முன்பகுதியில் சிக்கிய அவர்கள், ஸ்கூட்டருடன் 200 மீட்டர் துாரம் இழுத்து செல்லப்பட்டனர்.

மேலும், விபத்துக்குள்ளான காரில் பயணித்த ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஐ.டி., ஊழியர்கள் சிவாசிஸ் பட்டி நாயக், 25; நரேந்திரா, 25; எஸ்வந்த் பூபதி, 30; ஜப்பு தருண், 25; சம்பத் போய்னி, 25; ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பஸ் டிரைவர் திண்டுக்கல் மாவட்டம், மேற்கு கக்கன் வீதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் முருகேஸ்வரன், 30; காயத்துடன், புதுச்சேரி உருளையன்பேட்டை போலீசில் சரணடைந்தார்.

கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப் இஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கணபதிசெட்டிகுளம் பிம்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

@block_B@

'அதிவேகத்தால் கோர விபத்து'

விபத்து ஏற்படுத்திய அரசு சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சென்னையில் இருந்து இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்டது. இதில் 42 பேர் பயணித்தனர். மகாபலிபுரம் வரை மெதுவாக வந்த பஸ், அதன் பிறகு டிரைவர் பஸ்சை அதிவேகமாக இயக்கியுள்ளார். அதிகாலை நேரத்தில் போக்குவரத்து இருக்காது என நினைத்து டிரைவர் அசுர வேகத்தில் பஸ்சை இயக்கியுள்ளார். பஸ்சில் பயணித்த பலரும் அச்சத்துடன் இருந்துள்ளனர். வேகம் குறைக்காமலேயே பஸ் இயக்கி வந்ததால், இந்த விபத்து நடந்ததாக பஸ்சில் பயணித்தவர்கள் கூறியதாக கோட்டக்குப்பம் போலீசார் தெரிவித்தனர்.block_B

Advertisement