சங்கராபுரம் பகுதியில் சூறாவளி காற்றில் 400 ஏக்கர் மக்காசோளம் சாய்ந்து சேதம்

சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வேருடன் மக்காசோளம் பயிர்கள் சாய்ந்து சேதமானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் சங்கராபுரம் வட்டம் பூட்டை, புதுப்பாலப்பட்டு, மல்லாபுரம், எல்.என்.பட்டி, புதுப்பட்டு, பொய்க்குணம், கொசப்பாடி, மூக்கனுார், அரசம்பட்டு ஆகிய கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த மக்காச்சோளம் பயிர்கள் சூறாவளி காற்றில் வேருடன் சாய்ந்தது.

தகவலறிந்த சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன், சேதமடைந்த மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்தார். உதவி வேளாண் அலுவலர்கள் பழனிவேல், அப்பாஸ், தமிழ்செல்வன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் அருண் குமார் உடனிருந்தனர்.

பின்னர் வேளாண் இயக்குனர் கூறியதாவது : சங்கராபுரம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மக்காச்சோளம்பயிர்கள் வேருடன் சாய்ந்து சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்க் குறித்து ஆய்வு செய்து சேதமதிப்பு கணக்கிடப்பட்டதில், 400 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவித்தார்.

Advertisement