தாம்பரம் தங்கும் விடுதிகளில் நள்ளிரவில் போலீசார் சோதனை

தாம்பரம், மே 17–

தாம்பரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீசார் திடீர் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழகத்தில், புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, முதல் கட்டமாக, 717 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, போதை பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீசார் திடீர் அதிரடி சோதனை நடத்தினர். ஒவ்வொரு விடுதியாக சென்ற போலீசார், அங்கு தங்கியிருந்த நபர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடுகளை சரிபார்த்தனர்.

பின், ஒவ்வொரு அறைக்கும் சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, வெளியூர்களில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கியுள்ளனரா, கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனரா என்ற கோணங்களில், போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement