தீபாவளி பண்டு சீட்டு பிடித்து ரூ.42 லட்சம் மோசடி: பலே ஆசாமி கைது
கடலுார்: தீபாவளி பண்டு சீட்டு பிடித்து பரிசு தராமல் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி, தட்டாஞ்சாவடி, கற்பக விநாயகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். எலக்ட்ரிஷியன். இவரது நண்பர் ஹரிதாஸ்.
இந்நிலையில், கடந்த 2024ம் ஆண்டு ஹரிதாஸ் காளியப்பன் வீட்டிற்கு வந்து தீபாவளி பண்டு பிடிப்பது சம்பந்தமாக பேசினார்.
ஒரு நபருக்கு மாதம் 1000 ரூபாய் வீதம் 10 மாதங்கள் கட்டினால் தீபவாளிக்கு 2 கிராம் தங்க நாணயம், பட்டாசு பாக்ஸ், ஸ்வீட் காரம் போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறினார்.
அதைகேட்ட காளியப்பன் அந்த பண்டு சீட்டில் 420 பேரை சேர்த்துள்ளார்.
ஒரு நபருக்கு, 1000 ரூபாய் வீதம் மொத்தம் 4,20,000 ரூபாய் வசூல் செய்து முதல் தவணையாக ஹரிதாசை வீட்டுக்கு வரவழைத்து அவரது மாமா நித்தியானந்தம் முன்னிலையில் கொடுத்துள்ளார். பின்னர் 2025ம் ஆண்டு 2வது தவணையாக 22,10,700 ரூபாயை ஹரிதாஸ் மற்றும் அவரது மைத்துனர் மோனிஷ் ஆகியோர் முன்னிலையில் கொடுத்துள்ளார்.
மேலும் 15,69,300 ரூபாயை ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். ஆக, மொத்தம் 42,00,000 பணத்தை ஹரிதாஸ் பெற்றுக்கொண்டார். ஆனால் தீபவாளி பண்டு, 2 கிராம் தங்க நாணயம், ஸ்வீட், காரம், பட்டாசு ஆகியவற்றை வழங்கவில்லை. அவரைத்தொடர்பு கொண்டு கேட்டபோது, தருவதாக கூறி வந்தார். ஆனால் இதுவரை பணத்தையும், பரிசையும் வழங்காமல் ஏமாற்றி வந்தார்.
அதனால் காளிமுத்து எஸ்.பி., யிடம் இது குறித்து புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ததில் ஹரிதாஸ், காளியப்பனிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி வந்தது உறுதியானது. குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., ரகுபதி, மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் லிடியா ஆகியோர் விசாரணை செய்து ஹரிதாசை கைது செய்தனர்.