முதல்வர் விஜயின் அவசர கவனத்திற்கு!

2

பா.செண்பகவல்லி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: சென்னையின் பல இடங்களில், பெட்ரோல் பங்க்குகள் வாகன அணிவகுப்பால் திக்குமுக்காடிப் போவதைக் காண முடிகிறது. பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாட்டால் இந்த நிலை என்பது அனைவருக்கும் தெரிந்ததே!

இந்த தட்டுப்பாட்டுக்கு, மத்திய அரசோ, மாநில அரசோ காரணமல்ல. 'எத்தனை காசு கொடுத்தாலும், வேண்டிய அளவு பெட்ரோல், டீசல், எரிவாயு கிடைக்காது. நம்மால் முடிந்த அளவு, அவற்றின் உபயோகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வோம்' என, பிரதமர் மோடி, வேண்டுகோளாகவே விடுத்து, தானும் பின்பற்றி, பா.ஜ., ஆட்சி செய்யும் மாநில அமைச்சர்களுக்கும் அதை பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில், அரசியல்வாதிகளும் சற்றே, 'ஸ்மார்ட்'டாக, அறிவுபூர்வமாக சிந்தித்து, மேற்படி பொருட்களின் தங்கள் உபயோகத்தைக் குறைத்து, எதிர் அறிக்கை விடாமல் இருப்பது, சாலச் சிறந்தது.

ஈரான் போரால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்று நண்டு சிண்டுகளுக்குக் கூட புரிந்து விட்ட நிலையில், அரசியல்வாதிகளும், எதிர்கருத்து கொண்டுள்ள அரசுகளும் நாட்டுக்கு இயைந்த, பொதுமக்களுக்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது, காலத்தின் கட்டாயமாகி விட்டது.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், சூரிய சக்தி மின்சார உற்பத்தியும், மின்சக்தியில் இயங்கும் வாகனங்களும், மின் அடுப்புகளும் நமக்கு கைமேல் பலன் தருகின்றன.

பொதுமக்களால் உடனடியாக சூரியசக்தி உற்பத்தியை மேற்கொள்வதோ, மின் வாகனங்களையும், மின் அடுப்புகளையும் வாங்குவதோ இயலாத காரியம்; ஏனெனில், விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர வாய்ப்புள்ளது. பொதுமக்களின் தேவைக்கேற்ப இத்தகைய சாதனங்களை, அவசர கதியில் உற்பத்தியும் செய்ய முடியாது.

மற்ற மாநிலங்கள் எப்படி செயல்படப் போகின்றனவோ தெரியாது... நம் மாநில அரசு, இந்த பிரச்னையை அவசரநிலையாக கவனத்தில் கொண்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவை:

l அரசின் பொதுப் போக்குவரத்துக்கு மட்டும் பெட்ரோல், டீசல், எரிவாயுவை தங்கு தடையின்றி பெற்று, மக்கள் பயணிக்க ஏதுவான வகையில், பஸ்களை, ேஷர் ஆட்டோக்களை இயக்கலாம்.

l அரசு அலுவலகங்கள், அத்தியாவசிய பணி மேற்கொள்ளும் பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், துாய்மைப் பணியாளர்கள், மருத்துவமனைகள் தவிர மற்ற அனைவரையும் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தலாம்

l கிராமப்புறங்களில், விவசாயம் மேற்கொள்ள உதவும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை இயக்க கட்டுப்பாடு விதிக்கலாம். ஆனால், இங்கெல்லாம் மினி பஸ்களாவது இயக்க வேண்டியது அவசியம்

l ஹோட்டல்கள், சிறு உணவகங்களுக்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்களை அரசே சப்ளை செய்யும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளலாம். இப்படிச் செய்தால், கள்ளத்தனமான விற்பனை நிச்சயமாகக் குறையும்.

தட்டுப்பாடு தீரும்வரை, இதையெல்லாம் மேற்கொண்டால், மெதுவாக நாம், 'நம் கையே நமக்குதவி' என்ற கொள்கைக்கு மாறி, நமக்குத் தேவையானவற்றை, நாமே உற்பத்தி செய்யும் நிலைக்கு மாறி, வெளிநாட்டு இறக்குமதிகளை வெகுவாகக் குறைத்து வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

முதல்வர் விஜய், அவசரகால நடவடிக்கை எடுத்தால் நல்லது!

lll



மொழி பற்றாளர் வேடம் எதற்கு? ஆர்.ராமநாதன், மதுரையில் இருந்து அனுப்பிய , 'இ - மெயில்' கடிதம்: மத்திய - மாநில அரசுகள் எதைச் செய்தாலும் அதை எதிர்ப்பதை தங்கள் வாழ்நாள் லட்சியமாக கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்களும், விடுதலை சிறுத்தைகளும்!

அவ்வகையில், வெறும் வாயையே மெல்லுவோருக்கு அவலும் கிடைத்தாற் போன்று அமைந்து விட்டது, த.வெ.க., தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சி!

நிகழ்ச்சியில், இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் முதலிலும், அடுத்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது!

உடனே, 'தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி மூன்றாவதாக பாடலாம்; முதலாவதாக அல்லவா பாடி இருக்க வேண்டும். இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் நேர்ந்த அவமானம்; விஜய் மத்திய அரசுக்கு அடிபணிந்து விட்டார்' என்று ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து விட்டனர், கம்யூ., மற்றும் வி.சி.க.,வினர்.

அவர்களது கூச்சலுக்கு அடிபணிவது போல், த.வெ.க., அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 'இனி வரும் காலங்களில் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படும்' என்று அறிவித்து உள்ளார்.

இந்த எதிர்ப்புக்கு காரணம், வந்தே மாதரம் சமஸ்கிருத பாடலாம்!

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழியான தமிழ், கழகம் ஆட்சிக்கு வந்த 1967க்கு முன், வளம் இழந்து போயிருந்ததா அல்லது வலுவிழந்து தான் போயிருந்ததா? இப்போது அது அழிந்து போவதற்கு? இந்த தமிழ் பற்றாளர்களால், 133 அதிகாரங்களுடன் உள்ள 1,330 குறள்களில், ஏதாவது ஓர் அதிகாரத்திலிருந்து, 10 திருக்குறள்களை பிழையின்றி சொல்லவோ, எழுதிக் காட்டவோ முடியுமா?

தமிழ்த்தாய் வாழ்த்தாவது முழுமையாக தெரியுமா என்றால், அதுவும் தெரியாது. ஆனால், தமிழ் மொழி பற்றாளர்கள் போல் வேடமிடுவர்.

உண்மையிலேயே இவர்களுக்கு தமிழ் மொழி மீது பற்றும் பாசமும் இருந்தால், தமிழ்த்தாய் வாழ்த்தில் கருணாநிதி நீக்கிய வரிகளையும் சேர்த்து இனி பாடுவரா?

நாட்டுப்பற்று இல்லாத கம்யூ.,களும், தனக்கு மொழி அபிமானம் இல்லை என்ற வி.சி.க., தலைவர் திருமாவளவனை தலைவனாக கொண்டவர்களும், மொழி பற்றாளர்கள் போல் போடும் வேடம் எதற்கோ?



வினையை அறுவடை செய்யும் பழனிசாமி! வா.தியாகராஜன், கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எம்.ஜி.ஆர்., ரத்தம் சிந்தி உருவாக்கிய அ.தி.மு.க., எனும் ஆலமரம், பழனிசாமி எனும் சுயநல அரசியல்வாதியால் இன்று படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், பழனி சாமிக்கு எதிராக இன்று குரலெழுப்பும், அக்கட்சி முன்னாள் அமைச்சர் சண்முகம், அ.தி.மு.க., பொதுக்குழுவில் முன்னாள் முதல்வரும் தற்போதைய தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான பன்னீர்செல்வத்தை வெளியேற்ற வேண்டும் என்று போட்ட கூச்சல், அனைவரும் அறிந்தது.

அதே, 'சண்முகம் அண்ட் கோ'வினர் முதல்வர் விஜய்க்கு சட்டசபையில் ஆதரவளித்ததால், பழனிசாமி இவர்களை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டபின், 'அ.தி.மு.க.,வில் பிரிந்து சென்றவர்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும்' என்கிறார்.

தனக்கு வந்தால் ரத்தம்; அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்டினியா?

அதேநேரம், வினை விதைத்தவன் வினையைத் தான் அறுவடை செய்வான் என்பது பழனிசாமி விஷயத்தில் நிரூபணமாகி விட்டது! lll

Advertisement