ஏஜன்ட்களை நியமித்து வசூலை வாரி குவிக்கும் அதிகாரி!
மெ துவடையை சட்னியில் புரட்டியபடியே, “ஜூனியர்களை சீனியர்களா மாத்த முயற்சி நடக்கறது ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த துறையிலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“தமிழக தகவல் ஆணையத்தில், தலைமை கமிஷனர் ஷகில் அக்தர் உட்பட ஒன்பது கமிஷனர்கள் இருக்கா... ஷகில் அக்தர், அடுத்த மாசம் 15ம் தேதி, 'ரிட்டயர்' ஆறார் ஓய்...
“மீதம் எட்டு பேர் இருக்கா... இதுல, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான அதுல்ய மிஸ்ராவும், அபய்குமார் சிங்கும் போன மார்ச் மாசம் தான் தகவல் கமிஷனர் பதவிக்கு வந்தா ஓய்...
“இதுல, ஷகிலும், அபய்குமாரும் பீஹாரை சேர்ந்தவா... அதுல்ய மிஸ்ரா மட்டும் உ.பி.,காரர்... இவா மூணு பேருமே, தங்களுக்குள்ள ஹிந்தியில் பேசி நெருக்கமா இருக்கா ஓய்...
“ஆணையத்துல நடக்கற கூட்டம், நிறைவேற்றப்படும் தீர்மான நகல்களில் எல்லாம், அதுல்ய மிஸ்ரா, அபய்குமார் சிங் ஆகியோர் ரெண்டாவது, மூணாவது இடத்துல இருக்கற மாதிரி குறிப்பிடறா...
“தமிழகத்தை சேர்ந்த ஆறு சீனியர் கமிஷனர்களை தாண்டி, அதுல்ய மிஸ்ரா, அபய்குமார் சிங்கை ரெண்டாவது, மூணாவது இடத்துக்கு கொண்டு வர நடக்கற முயற்சி, ஆணையத்துல புகைச்சலை கிளப்பியிருக்கு ஓய்...” என்றார், குப்பண்ணா.
“தோல்விக்கு பல காரணங்களை அடுக்கியிருக்காவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“தி.மு.க., மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர், சமீபத்துல கட்சி தலைவர் ஸ்டாலினை சந்திச்சு பேசியிருக்காவ... அப்ப, 'சட்டசபை தேர்தல்ல கனிமொழிக்கு சீட் தராம விட்டதால, மகளிர் அணி நிர்வாகிகள் அதிருப்தியாகி, தேர்தல் பணிகள்ல அமைதியாகிட்டாவ'ன்னு சொல்லியிருக்காவ வே...
“இன்னும் சிலர், 'நம்ம ஆட்சியில, அதிகாரிகள் ராஜ்யம் தான் நடந்துச்சு... அடிமட்ட தொண்டனுக்கு எந்த பலனும் கிடைக்கல... அதே மாதிரி, கட்சி நிர்வாகிகள், தங்களது மகன், மகளுக்கு அரசு வேலைக்கு முயற்சி பண்ணியும் கிடைக்கல... இதனால, அவங்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியும் தோல்விக்கு காரணம்'னு விளக்கியிருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.
“ஏஜன்ட்கள் போட்டு வசூல் பண்றாரு பா...” என்றார், அன்வர்பாய்.
“யாருங்க அது...” என கேட்டார், அந்தோணிசாமி.
“திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் இருக்குது... இந்த ஊராட்சிகள்ல நடக்கிற பணிகளுக்கான பில் தொகைக்கு ஒன்றிய அதிகாரி தான் ஒப்புதல் தரணும் பா...
“இந்த அதிகாரி, ரெண்டு பஞ்சாயத்து எழுத்தர்களை ஏஜன்ட்களா நியமிச்சிருக்காரு... அந்த ரெண்டு பேர் மட்டும் தான், அதிகாரியை பார்க்க முடியும் பா...
“பஞ்சாயத்து செயலர்கள் எல்லாம், அந்த ஏஜன்ட்களை பார்த்து, பில் தொகைக்கு ஏற்ப 10 முதல் 20 சதவீதம் கமிஷனை வெட்டுனா தான், பில்லுக்கு அதிகாரி ஒப்புதல் தருவாரு பா...
“அதுவும் இல்லாம, இந்த ஏஜன்ட்கள் ரெண்டு பேரும், பல ஊராட்சி செயலர்களிடம் போலி பில்களை போட்டு தரும்படியும் நெருக்கடி குடுக்கிறாங்க... இந்த வசூல் பணிகளுக்காகவே அந்த ரெண்டு ஏஜன்ட்களுக்கும், ஒன்றிய அலுவலகத்துல தனி இடத்தையே அதிகாரி ஒதுக்கி குடுத்திருக்காரு பா...” என முடித்தார், அன்வர்பாய்.
“மனோகரன், சீனிவாசன் இப்படி உட்காருங்க... செல்வகுமார், இப்பதான் கிளம்பினாருங்க...” என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
மேலும்
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
அமைச்சரவையில் வன்னி அரசு, ஷாஜகான்; இன்று 9.30 மணிக்கு பதவியேற்பு
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி
-
64 ஆண்டுகளுக்கு பின்னர் குமரிக்கு காங்., அமைச்சர்; கழகங்களிடம் கைகட்டிய நிலை மாறியதாக மகிழ்ச்சி