ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க சாத்தியமில்லை 50 சதவீதம் குறுவை சாகுபடி குறையும்
- நமது நிருபர் -
வரும் ஜூன் 12ல், மேட்டூர் அணை திறக்க சாத்தியமில்லாத நிலையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி, கடந்த ஆண்டை விட, 50 சதவீதம் குறையும் என, வேளாண் துறையினர் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு, 6.31 லட்சம் ஏக்கரில், தஞ்சாவூர் , நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடந்தது.
மேட்டூர் அணை ஜூன், 12ம் தேதி திறக்கப்பட்டு, தொடர்ந்து போதுமான அளவுக்கு நீர்வரத்து இருந்ததால், இந்த இலக்கு எட்டப்பட்டது.
மேலும், மேட்டூர் அணைக்கு உபரி நீர் வரத்து காரணமாக, ஆறு ஆண்டுகளில், 2024ம் ஆண்டு தவிர, மற்ற ஆண்டுகளில், டெல்டா பாசனத்துக்கு உரிய காலத்தில் அணை திறக்கப்பட்டது.
இலக்கை மிஞ்சிய சாகுபடி இதன் வாயிலாக டெல்டா மாவட்டங்களில் , குறுவை பருவத்தில் இலக்கை மிஞ்சி நெல் சாகுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், 2025 மே 16ல், மேட்டூர் அணை நீர்மட்டம், 108.18 அடியாகவும், நீர் இருப்பு, 75.85 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.
ஆனால், நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 79.16 அடியாகவும், நீர் இருப்பு, 41.12 டி.எம்.சி.,யாகவும் மட்டுமே உள்ளது.
நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருந்தால் தான், டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். தற்போது நீர் இருப்பு மிக குறைவாக இருப்பதால், அணையை ஜூன், 12ல் திறப்பதற்கு சாத்தியமில்லாத நிலை உள்ளது.
நடப்பாண்டில் வேளாண்துறையின், குறுவை சாகுபடி இலக்கும் குறைக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு குறைவு இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில், 1.57 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில், 97,000 ஏக்கர், மயிலாடுதுறையில் , 87,000 ஏக்கர், நாகையில், 3 ,000 ஏக்கர் என, மொத்தம், 3.44 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூத்த வேளாண் வல்லுநர் கலைவாணன் கூறியதாவது:
மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்கு போக, ஜூன் முதல் வாரத்தில், 35 டி.எம்.சி.,யாக தண்ணீர் இருப்பு இருக்கும். இன்னும், 30 நாட்களுக்குள் கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை என்றால், உரிய காலத்தில் குறுவை சாகு படிக்கான வாய்ப்பு குறைவு.
இந்த ஆண்டு, 'எல்நினோ' வெப்ப அலை இருக்கும் என்பதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைவாக பெய்யும் என, கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், தென்மேற்கு பருவமழை கை கொடுத்து, கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நீர்மட்டம், 90 அடியை எட்டும் பட்சத்தில், ஜூன் 12ல் தண்ணீர் திறக்க வாய்ப்புஉள்ளது. ஆனால், அதற்கு சாத்தியம் குறைவு.
கடல் நீர் புகும் வாய்ப்பு காவிரியில் தண்ணீர் வராத நிலையில், தென்மேற்கு பருவமழையும் குறைவாக இருக்கும் பட்சத்தில், நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால், கடல் நீர் புகுவதற்கு வாய்ப்புள்ளது. குறுவைக்கு பதிலாக பயறு வகை, எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்யலாம்.
நடப்பாண்டில் தண்ணீர் வரத்தை பொறுத்து, மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஆகஸ்ட், 2வது வாரத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால், சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி
-
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை
-
சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
-
பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்
-
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு