பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி பூங்காவில் வேரோடு சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தாததால் நடைபயிற்சி செய்வோர் சிரமப்படுகின்றனர்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பழைய நகராட்சி அலுவலகம் அருகே பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் மரங்கள் செழிப்பாக வளர்ந்துள்ளதாலும், சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் இருப்பதாலும் காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள், சிறுவர்கள், கல்லுாரி மாணவ, மாணவிகளின் கூட்டம் காணப்படும்.

இந்த பூங்காவில், காலை, மாலை வேளையில் பலர் நடைபயிற்சி மேற்கொள்வதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நகராட்சி பூங்காவில் சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த காற்று, மழையில் பெரிய மரம் வேரோடு சாய்ந்து நடை பயிற்சி பாதையில் விழுந்தது.

இதனால், பூங்காவிற்கு வரும் பொதுமக்களுக்கும், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கும் பெரும் இடையூறாக உள்ளது. மரத்தை அகற்றக் கோரி பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், பூங்காவில் காய்ந்த நிலையில் சில பெரியளவிலான மரங்கள் எந்த நேரத்திலும் பலத்த காற்றால் விழும் நிலையில் உள்ளது. இந்த மரங்களை கழித்து அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

இதனால் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடன் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

பூங்காவில் விழுந்துள்ள மரத்தை அப்புறப்படுத்தவும், காய்ந்த மரங்களை கழிக்கவும் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisement