சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகள் மூலம் பரவும் நோய் தடுப்பு திட்டம், உள்ளாட்சி துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கொசு உற்பத்தியாகும் பொருட்களை கண்டறிந்து அகற்றும் முகாம் நேற்று நடந்தது.
புதிய பஸ் நிலையத்தில் நடந்த முகாமில் நோய் தடுப்பு திட்ட அலுவலர் முருகன், புதுச்சேரி நகராட்சி மருத்துவ அலுவலர் ஆர்த்தி, நகராட்சி ஊழியர்கள், லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லுாரி மணவர்கள் பங்கேற்றனர்.
இதில், பஸ் நிலைய வளாகம், கடைகள், ஹோட்டல்கள், பஞ்சர் கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகும் பொருட்களை கண்டறிந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக, பழைய டயர்கள், உடைந்த பாத்திரங்கள், திறந்த நீர்தொட்டிகள், பயன்படுத்தப்படாத பொருட்கள் அகற்றப்பட்டன.
மேலும், டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பயணிகளிடம் வழங்கப்பட்டது.