விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்: என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை - நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி
சென்னை: இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறிய நடிகர் ரவி மோகன், ''விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்; என் குடும்பத்தை கெடுத்தது, மூன்று எழுத்து நடிகை,'' என, நேற்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
பிரபல நடிகர் ரவி மோகன், 45. ஜெயம், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், இவரது காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் நெருக்கம் காட்டி வந்தார். இருவரும் பல நிகழ்வுகளுக்கு ஒன்றாக சென்றனர். சில தினங்களுக்கு முன், 'ஆர்த்தி குறித்து கெனிஷா எதுவும் பேசக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தான் யார், தன் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகள் என்ன என்பதை, கெனிஷா வீடியோவாக வெளியிட்டார். மேலும், 'நான் அவரை விட்டு பிரிந்து விட்டேன். சென்னையை விட்டும் வெளியேறி விட்டேன்.
'ஆன்லைன்' விமர்சனங்கள் மற்றும் சூழ்ச்சிகளால் சோர்ந்து விட்டேன். 'இன்ஸ்டாகிராம்' மற்றும் அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் விலகுகிறேன். பெண்ணியம் வெற்றி பெற்றது. மகிழ்ச்சி தோற்றுப்போனது' என, பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நேற்று ரவி மோகன் அளித்த பேட்டி:
சாதுவாக இருந்த என்னை, சிலர் சீண்ட முயற்சிக்கின்றனர். இத்தனை நாள் பேசாமல் இருந்தது தவறு. மற்றவர்கள் போல், எனக்கு 25 பேர் கொண்ட குழு கிடையாது. கடந்த 23 ஆண்டுகளாக சினிமா துறையில் பணியாற்றி வந்துள்ளேன். என் குடும்பத்தை ஏதேனும் குறை கூறினால், சும்மா இருக்க மாட்டேன். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக படம் எடுத்தவன் நான்.
இவ்வளவு நாள், நான் அமைதியாக இருந்ததுக்கு காரணம், உண்மை ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
குழந்தைகள் மீது அன்பு இல்லை என்று என்னை பார்த்து சொல்கின்றனர். என் பாசம் குறித்து யாரும் பேசாதீங்க.
அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என தெரிந்து தான் ஓடி வந்தேன். பாதுகாவலர்களுடன் என் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். 'சைபர் புல்லிங்கால்' கெனிஷாவை ஊரை விட்டே அனுப்பி விட்டனர். அவர்களை சும்மா விடமாட்டேன்.
நான் எதுவும் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவர்கள் நன்றாக கோடிக் கணக்கான சொத்துக்களோடு, சுகமாக இருக்கின்றனர். 'அந்த குடும்பம் வேண்டாம்' என, என் பெற்றோர் கெஞ்சினர்.
நான் தான் கேட்கவில்லை. என் கஷ்டத்தில் என் கூட இருந்தவர் கெனிஷா. என் பசங்களுக்காக மட்டும்தான் அமைதியாக இருக்கிறேன்.
என் னை நிம்மதியாக வாழ விடாமல் செய்கின்றனர். மூன்றெழுத்து நடிகை ஒருவர், என் குடும்பத்தை கெடுக்கிறார்.
எனக்கு நடந்தது, 'பிளாக் மெயில்' திருமணம். கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வேன் என மிரட்டி, திருமணம் செய்தனர். அவர்கள் குடும்ப தயாரிப்பு நிறுவனத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றனர்.
சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், எந்த வேலை செய்தும் பிழைத்து கொள்வேன். என்னை மன்னித்து விடுங்கள்; என்னால் வேலை செய்ய முடியவில்லை. என் தனிப்பட்ட பிரச்னைகள் தீர்ந்த பின் தான் நடிக்க வருவேன்.
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப்போவது இல்லை. என் படங்கள் திரைக்கு வராது. எனக்கோ கெனிஷாவுக்கோ ஏதாவது நேர்ந்தால், அதற்கு அவர்கள் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
''நடிகர் ரவி மோகன் கூறுவது பொய்,'' என, ஆர்த்தியின் தாய் சுஜாதா கூறியுள்ளார்.
நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டு குறித்து, மனைவி ஆர்த்தியின் தாயும், படத்தயாரிப்பாளருமான சுஜாதா கூறியதாவது: எங்கள் மீது எந்த தவறும் இல்லை. விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை என, ரவி கூறுவது பொய். இரண்டு ஆண்டில் இரு முறை மட்டுமே குழந்தைகளை பார்க்க வந்திருந்தார். என் மீதான அவதுாறுகளுக்கு, உரிய நேரத்தில் பதிலளிப்பேன்.
ரவியின் பேச்சால் குழந்தைகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ரவியின் எந்த முடிவுக்கும், நாங்கள் காரணமல்ல. அவர் மீது இன்றும், எங்களுக்கு மரியாதை உள்ளது. ஒரு பெண் தமிழகத்தில் தனியாக இருந்தால், எல்லா பெற்றோரும் துணையிருப்பர். சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
நிறைய ஆண்களின் இப்படித்தான் இருக்கிறது ... ஆண் தன் கஷ்டத்தை வெளியே சொல்லக்கூடாது... அப்படையே சொன்னாலும் ஒருத்தரும் அதை ஆதரிக்க மாட்டார்கள் .. ஒரு ஆண் தன உயிரையே விட்டாலும் , அவன் குடும்பமே உயிர் நீத்தாலும் நியாயம் கிடைக்காது... அதே சமயம் ஒரு பெண் ஒரு சொட்டு கண்ணீர் போதும் பெண்ணின் தரப்பை நியாப்படுத்திவிடலாம்
ரொம்ப நல்ல முடிவு வாழ்க வளமுடன்