மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
கோவை:இரு சக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் மூளைசாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில், ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
ராக்கிபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், சபிதா தம்பதியினரின் மகன் சங்கீத், 19. இவர், கடந்த 16 ம் தேதி, தொப்பம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு முதலுதவி கொடுக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக, அவினாசிரோடு, கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 18) மூளைசாவு ஏற்பட்டது. சங்கீத் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில், தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலின்படி, இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. இதில், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை, கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கும், இதயம் மற்றும் நுரையீரல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இதன்மூலம், ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். சங்கீத் உடலுக்கு, மருத்துவமனை நிர்வாகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
...