டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் முற்றுகை

போடி:: போடி அருகே தர்மராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் கடையை முற்றுகையிட்டனர்.

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மராஜ்நகர், தேவர் காலனி, ரங்கநாதன் நகர் செல்லும் ரோடு கோயில், பள்ளி களுக்கு செல்லும் முக்கிய பாதையாக அமைந்து உள்ளது. போடிமெட்டு ரோடு, தர்மராஜ் குடியிருப்பு பகுதியை ஒட்டி டாஸ்மார்க் கடை அமைந்து உள்ளது. இப்பகுதியில் காலை முதல் இரவு வரை மது பியர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

தர்மராஜ் நகர் ரோட்டில் மது பிரியர்கள் கூட்டமாக நின்று பெண்களை கேலி செய்வதும், பின் தொடர்ந்து தொல்லை தருவதும் அதிகரித்து வருகிறது. இதனால் மாலை 6:00 மணிக்கு மேல் பெண்கள் நடந்து, டூவீலரில் கூட செல்ல முடியாமல் அச்சம் அடைந்து வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியை ஒட்டி அமைந்து உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி நேற்று பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதனால் கடை இரண்டு மணி நேரமாக திறக்கவில்லை. போடி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணக் குமார், வி.ஏ.ஓ., மகேந்திரன் பேச்சு வார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.

Advertisement