அதிமுகவின் இன்றைய நிலைக்கு அவர் ஒருவர் தான் காரணம்; செங்கோட்டையன் பாய்ச்சல்

18


கோவை: 'எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இயக்கம் அவரால் இன்றைக்கு வலுவிழந்து இருக்கிறது. நான் ஒருவரே போதும் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார்' என, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.,ஐ நிதியமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக சாடியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: நான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான், அது தான் இப்பொழுது நிலை. நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜயால் முடியும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இயக்கம் அவரால் (இபிஎஸ்) இன்றைக்கு வலுவிழந்து இருக்கிறது. நான் ஒருவரே போதும் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார். அதை காலம் கட்டாயம் மாற்றிக் காட்டும்.

2 நாள் தான்…




அதிமுகவுக்கு எவ்வளவு அமைச்சர்கள் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்; நாங்கள் இதுவரை எதுவும் கூறவில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்.

இப்போது தான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. நான் இப்போது தான் சென்னைக்கு செல்கிறேன். அதற்குள் எல்லா விஷயங்களுக்கும் எப்படி பதில் சொல்ல முடியும்? உங்கள் வீட்டு பொருளாதாரத்தை பற்றி கேட்டால் உடனே பதில் சொல்ல முடியுமா? அது போலத் தான் அரசின் செயல்பாடுகளும்.

சாதனைகள்



200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை மக்கள் வரவேற்று உள்ளனர். மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு போன்ற விஷயங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையங்கள், ஆலயங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் 717 கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. பொறுப்பேற்ற உடனேயே இவ்வளவு சாதனைகள் செய்து இருப்பது இந்தியாவில் முதல்வர் விஜயை தவிர வேறு யாரும் இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Advertisement