அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு

23


சென்னை: 'அமைச்சரவையில் பங்குபெற விசிக மற்றும் முஸ்லிம் லீக்கிற்கு அழைப்பு விடுக்கிறோம். இது தான் எங்கள் முதல்வரின் விருப்பம்,' என்று அமைச்சர் ஆதவ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; அமைச்சரவை விரிவாக்கம் குறித்த முதல்வர் விரைவில் வெளியிடுவார். அதில், சமூக நீதிகளின் அடிப்படையில் இயங்கக் கூடிய தலைவர்களும், கட்சிகளும் அமைச்சரவையில் இணைய வேண்டும். குறிப்பாக, காங்கிரஸ் கட்சி, முதல்வர் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய ஆதரவு கொடுத்தது. அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல, இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்ற அவர்களின் கொள்கை முடிவை நாங்கள் எப்போதும் மதிப்போம். இந்த அரசு எப்போதும், சமூக நீதிக்கான அரசாக இருக்கும். மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்போம். அயோத்தி தாசரின் மண்டபத்தின் முன்பு நின்று இதனை உறுதியாகவும், சத்தியமாகவும் சொல்கிறோம். அதேபோல, அமைச்சரவையில் பங்குபெற விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் முஸ்லிம் லீக்கிற்கு அழைப்பு விடுக்கிறோம். இது தான் எங்கள் முதல்வரின் விருப்பம். இஸ்லாமிய சகோதரர்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் அந்த தலைவர்களிடமும் வலியுறுத்தியுள்ளோம்.


இவ்வாறு ஆதவ் கூறினார்.

Advertisement