வழிகாட்டும் பெயர் பலகைகளை மறைக்கும் செடி கொடிகள்: வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பம்

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சி பகுதி ரோடுகளில் வழிகாட்டும் பெயர் பலகைகளை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள செடி, கொடிகள், மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி பகுதிகளில் ஏராளமான ரோடுகள் உள்ளன. இங்கிருந்து கிராமங்களுக்கு குழப்பம் இன்றி செல்லும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் பல இடங்களில் செடி, கொடிகள் மரக்கிளைகள் வளர்ந்து இந்த பெயர் பலகைகளை மறைத்துள்ளன. விளம்பர போஸ்டர்களை ஒட்டி ஊர்களின் பெயர்களை மறைத்துள்ளனர். பெயர் பலகைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது.

இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகனஓட்டிகள் எந்த பக்கம் செல்வது என குழப்பம் அடைகின்றனர். பெயர் பலகை அருகில் வந்து வாகனத்தை நிறுத்தி பார்த்து விட்டு பிறகு செல்ல வேண்டி உள்ளது.

ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோட்டில் வேடசந்துார் வழித்தடத்திற்கு செல்லும் சர்வீஸ் ரோட்டை குறிக்கும் பெயர் பலகையை மறைக்கும் வகையில் சென்டர் மீடியனின் வைக்கப்பட்டுள்ள செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

இதுபோல் காளாஞ்சிபட்டி மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் வேடசந்துார் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் பெயர் பலகையை மரக்கிளைகள் மறைத்துள்ளன.

எனவே வழிகாட்டும் பெயர் பலகைகளை மறைக்கும் செடி, கொடிகளை அகற்ற வேண்டும். ரோடுகளை சம்பந்தப்பட்ட துறையினர் அடிக்கடி ஆய்வு செய்து குறைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement