ஜோஹோ, நெஸ்கோ, அஜிலிசியம் அணிகள் 'தினமலர் பிரீமியர் லீக்' தொடரில் அபாரம்: தகுதிச்சுற்றில் சோமசுந்தரம், சஞ்சய் கவுதம் அதிரடி

சென்னை: 'டி.பி.எல்., டி - 20' கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று ஆட்டங்களில், ஜோஹோ, நெஸ்கோ மற்றும் அஜிலிசியம் அணிகள் அபார வெற்றி பெற்று, அடுத்த சுற்றை நோக்கி முன்னேறியுள்ளன. சோமசுந்தரம் மாரியப்பன் அதிரடி ரன்களும், சஞ்சய் கவுதம் சதமும், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.

'தினமலர்' நாளிதழ் மற்றும் 'நம்ம பேம்லி குரூப்' இணைந்து, சென்னையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையிலான டி.பி.எல்., எனும் 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகின்றன.

இரண்டாவது சீசனாக டி - 20 போட்டியாக நடந்து வரும் இதில் 32 நிறுவனங்களை சேர்ந்த அணிகள், 'சூப்பர் நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் மோதின. அதில் தேர்வாகிய 16 அணிகள், தகுதி சுற்றில் மோதி வருகின்றன.

மேடவாக்கம், வைட் பீல்ட் மைதானத்தில் நேற்று நடந்த முதல் தகுதிச்சுற்றில், ஜோஹோ சி.சி., மற்றும் டி.டி.எல்., குழுமம் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஜோஹோ அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. எதிர்த்து விளையாடிய டி.டி.எல்., குழும அணி, 19.5 ஓவர்களில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

போட்டியின் நாயகனாக ஜோஹோ அணியின் சோமசுந்தரம் மாரியப்பன் திகழ்ந்தார். வெறும் 33 பந்துகளில் அதிரடியாக 83 ரன்கள் குவித்த அவர், எட்டு பவுண்டரிகளும் ஆறு சிக்சர்களும் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

மற்றொரு போட்டியில், முதலில் விளையாடிய இன்போசிஸ் சென்னை டி.சி., அணி, 19.5 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய நெஸ்கோ டி.ஏ.இ., அணி, அதிரடியும் நிதானமும் கலந்த ஆட்டத்தால், 18 ஓவர்களில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 139 ரன்கள் எடுத்து வெற்றிக்கொடி நாட்டியது.

போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது நெஸ்கோ வீரர் பில்லா ஹசனின் மிரட்டல் பந்துவீச்சு. நான்கு ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, நான்கு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த அவர், இன்போசிஸ் அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தி, வெற்றிக்கு வித்திட்டார்.

கடைசி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அஜிலிசியம் சி.சி., அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 200 ரன்கள் குவித்தது. அணியின் நட்சத்திர வீரர் சஞ்சய் கவுதம், எதிரணி பந்துவீச்சை சிதறடித்து, 67 பந்துகளில் 105 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்ஸில் 16 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் இடம்பெற்றன; ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

தொடர்ந்து, 201 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய மேவரிக்ஸ் அணி, கடுமையாக போராடிய போதிலும், 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அஜிலிசியம் சி.சி., அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

Advertisement