போர் வீரர்களின் நடுகற்கள் வி.சாத்தனுாரில் கண்டெடுப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே போரில் இறந்த வீரர்களின் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனுார் கிராமத்தில், வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு செய்தபோது, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரர்கள் நடுகற்கள் கண்டறியப்பட்டது. ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது;

வி.சாத்தனுார் கிராம விளை நிலத்தில் உருவங்கள் பொறிக்கப்பட்ட 3 கற்கள் உள்ளது. வலது பக்கம் திரும்பிய நிலையில் வீரன் ஒருவன் நின்றிருக்கிறான். இடதுகரம் வாளை கீழ்நோக்கி பிடித்துள்ளார். வலது கை மேல் நோக்கி உள்ளது.

வாள் கீழ்நோக்கி இருப்பதால், போர் அல்லது சண்டை முடிந்து விட்டது என்பதை குறிக்கிறது. இப்பகுதியில் நிகழ்ந்த போர் அல்லது சண்டையில் உயிர்நீத்த வீரனாக இருக்கலாம். இது வீரக்கல் என்றும், நினைவுக்கல் என கூறுவர். இதன் அருகில் மற்றொரு சிற்பத்தில் பெண் உருவம் உள்ளது. இது அந்த வீரனோடு இறந்த அவரது மனைவியாக இருக்கலாம். அருகிலுள்ள மற்றொரு சிற்பம் கை, கால்களைத் தொங்கவிட்ட நிலையில், தலை துண்டிக்கப்பட்டுள்ளது. கழுவேற்ற சிற்பம் போல் தெரிகிறது.

இதன் அருகில் ஐய்யனார் கோவில் வளாகத்தில் இதுபோன்று 2 நினைவுக் கற்கள் காணப்படுகிறது. வீரன் ஒருவன் கையில் வில், மற்றொரு வீரன் கையில் வாளும், கேடயம் ஏந்தி காணப்படுகின்றனர். கி.பி.15-16ம் நுாற்றாண்டில் இப்பகுதியில் போர் அல்லது சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் உயிர் நீத்த வீரர்களுக்கு நடுகல் நடப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஊரில் சோழர் கால சப்தமாதர்கள் சிற்பங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. வரலாற்று பின்புலம் கொண்ட ஊராக வி.சாத்தனூர் இருந்துள்ளது என்பதற்கு இந்தச் சிற்பங்கள் சான்று என கூறினார்.

Advertisement