குடிநீர், உணவுக்காக வெளியேறும் வன விலங்குகள்... பாதுகாக்கப்படுமா?:வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் பரிதாபம்

வேப்பூர்: வேப்பூர் பகுதியில் குடிநீர் மற்றும் உணவு தேடி தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் வன விலங்குகள் பலியாவதை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, உளுந்துார்பேட்டை அடுத்த பாதுாரில் துவங்கி வேப்பூர் வழியாக சேலம்-கடலுார் சாலையில் வேப்பூர், பெரியநெசலுார், அடரி, கீழ் ஒரத்துார், மாங்குளம், சிறுபாக்கம், அரசங்குடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் வரை சாலை, 50 கி.மீ., சுற்றளவில் உள்ளது.

இந்த சாலையின், இருபுறமும், 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு மான், காட்டுபன்றி, நரி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும், மயில் உள்ளிட்ட பறவை இனங்களும் வசிக்கின்றன.

இந்த வனத்தில் புங்கன், நாவல், கூர்மருது உள்ளிட்ட பல்வேறு மரங்களும், குடிநீருக்காக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகளும், கான்கிரீட் தொட்டிகளும் அமைக்கப்பட்டன.

மழைக்காலங்களில் தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் மழைநீர், வன விலங்குகளுக்கும், விவசாயிகளின் கிணற்றடி நீர்மட்டம் உயரவும் பயன்படுகிறது.

வறட்சி காலங்களில் கான்கிரீட் தொட்டிகளில், நீரை நிரப்பி வனவிலங்குகளின் குடிநீர் தேவைகளை நிறைவேற்ற, துவக்க காலத்தில், அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கோடை காலங்களில், கான்கிரீட் தொட்டிகளில் நீர் நிரப்பப்படவில்லை.

இதனால், வனவிலங்குகள் குடிநீர் மற்றும் உணவுக்காக, தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து விவசாய சாகுபடி நிலங்களுக்கு வருகின்றன.

அவ்வாறு சாலையை கடக்கும் மான், குரங்குகள் விலங்குகள் அவ்வழியே சாலையில் வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன.

மேலும், விவசாய நிலங்களில் உணவு மற்றும் குடிநீருக்காக வரும் விலங்குகள் திறந்த வெளி கிணறுகளில் உள்ளே விழுந்து பலியாகின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

விவசாய நிலங்களுக்குள் புகும் விலங்குகள் மரவள்ளி, மணிலா, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும், அழித்தும் நாசம் செய்கின்றன.

இதனால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுதால் விவசாய தொழிலை புறக்கணித்து விட்டு கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கு பிழைப்பை தேடி செல்லும் நிலை உள்ளது.

சாலையில் இருபுறமும் வ னத்துறை அதிகாரிகள் தடுப்பு வேலி அமைத்திடவும், கோடை காலங்களில் வன விலங்குகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய வாகனம் மூலம் கான்கிரீட் தொட்டிகளில் நீரை நிரப்பிடவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

Advertisement