அமைச்சரவையில் இடம் பெறுவதா, வேண்டாமா? குழப்பமான நிலையில் திருமாவளவன்

27

சென்னை: ''த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என்பது என் நிலைப்பாடு; இடம் பெற வேண்டும் என்பது கட்சியில் பெரும்பாலானோர் நிலைப்பாடு,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: காட்டுமன்னார்கோவில் தொகுதியில், நான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால், இன்றைய அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இருக்குமென கூறுகின்றனர்.

திராவிட கட்சிகள் பலவீனப்படக்கூடாது என, தேர்தலுக்கு முன்பே வி.சி.க., நிலைப்பாடு எடுத்திருந்தது. எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும், அ.தி.மு.க., பாதுகாப்போடு இருக்க வேண்டும்; தி.மு.க.,வும் வலிமையோடு இருக்க வேண்டும் என சுட்டிகாட்டி வந்தோம். நாம் குறிவைத்தது போலவே, கடந்த லோக்சபா தேர்தலில், 11 சதவீத ஓட்டு பெற்ற பா.ஜ.,வின் ஓட்டு வங்கி, 2.50 சதவீதமாக குறைந்துள்ளது.

திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தி விட்டு, யார் இங்கு வரப் போகின்றனர் என்பது, முதன்மை கேள்வி. இன்றைக்கு அந்த இடத்தில் போய் நின்றிருக்கிறோம். காலப்போக்கில், த.வெ.க., - பா.ஜ., என்ற நிலை வந்து நிற்கும். அதை தடுக்க, திராவிட கட்சிகள் விழிப்புடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும்.

பதவிதான் முக்கியம் என்றால், காங்கிரசுக்கு முன்பே, த.வெ.க., அரசுக்கு, நான் கை நீட்டி இருக்க முடியும். த.வெ.க-., அமைச்சரவையில் இடம் பெற வேண்டாம் என்பது, என் நிலைப்பாடு; வேண்டும் என்பது வி.சி.க.,வில் பெரும்பாலானோரின் நிலைப்பாடு.

தீர்க்கமான முடிவை எடுக்க கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் ஆளாளுக்கு எனக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை, கக்கிக்கொண்டு இருக்கின்றனர். கட்சியில் நீண்டுள்ள விவாதமும் முற்றுப்பெறவில்லை.

அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த வினாடி வரை முடிவெடுக்கவில்லை. தான்தோன்றித்தனமாக முடிவெடுக்காமல், விவாதத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் தேவை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement