பல நாட்களுக்கு பின் குடிநீர் குழாய் கசிவை சீரமைத்த அதிகாரிகள்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் கீழ் பகுதியில், 10 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டு இருந்த அத்திக்கடவு குடிநீர் குழாயில், கடந்த ஆண்டு கசிவு ஏற்பட்டது.

குழாயிலிருந்து ஏற்பட்ட தண்ணீர் கசிவு, பஸ் ஸ்டாண்ட் அருகே தேங்கி நின்றது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள், குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டது. இது குறித்து பில்லூர் குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு, பலமுறை தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர், அத்திக்கடவு குடிநீர் குழாயில் இருந்து வெளியேறும் நீரை, கால்வாய் வெட்டி அருகே உள்ள பள்ளத்தில் இணைக்க ஏற்பாடு செய்தனர்.

குடிநீர் குழாய் கசிவு சரி செய்ய, குழாயை சில மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டி இருக்கும். இதனால், துடியலூர் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்படும் என்பதால், அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் பில்லூர் குடிநீர் திட்ட பணியாளர்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன், குழி தோண்டி, குழாய் கசிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காலையில் தொடங்கிய பணி மாலையில் முடிவடைந்தது. இதனால் பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், இரவு நேரத்தில் வாகனங்களில் செல்பவர்கள், எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் செல்ல முடியும்.

Advertisement