வீடுகளுக்கு சேவை அளிக்கும் பணியாளர் தேர்வில் கவனம் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் மேன் பவர் சப்ளை நிறுவனங்களுடன் மாநகர போலீசார் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், 85 மேன் பவர் நிறுவனங்களை சேர்ந்த 120 பிரதிநிதிகள் பங்'கேற்றனர்.

சமீப காலங்களில் நடக்கும் கொலை, திருட்டு சம்பவங்களில் வீடுகளுக்கு நேரடியாக சென்று சேவை வழங்கும் பணியாளர்கள், தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ஆட்கள் தேர்வில் கவனம் தேவை என போலீசார் தெரிவித்தனர்.

Tamil News

பணியாளர்களை நியமிக்கும் முன், அவர்களின் முழு விவரங்களை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நன்னடத்தை சான்றிதழ்களை கட்டாயமாக பெற வேண்டும் என்றும் கூறப்பட்டது.பணியாளர்களின் பெயர், நிரந்தர முகவரி, ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள், செல்போன் எண்கள், அவசர தொடர்பு விபரங்கள் ஆகியவற்றை பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை பணியில் சேர்க்கும் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


'பாதுகாப்பு பணிகளில்

வயதானோர் வேண்டாம்'



இக்கூட்டத்தில் கமிஷனர் கண்ணன் பேசுகையில், “மக்களை நேரடியாக அணுகும் பணிகளில் உள்ளவர்களை நியமிக்கும் போது மிகுந்த கவனம் தேவை. அவர்களை பற்றி முழுமையாக தெரிந்த பிறகே பணியில் சேர்க்க வேண்டும். குறிப்பாக ஏ.டி.எம்., மையங்கள் மற்றும் வீடுகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படும் செக்யூரிட்டிகள், வயதை விட உடல் ஆரோக்கியமும், உடல் பலமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். வயது முதிர்ந்த மற்றும் பணியை சரியாக செய்ய முடியாதவர்களை பாதுகாப்பு பணியில் நியமிப்பது ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும். பணியாளர்கள் நியமனத்திற்கு தனி 'செக் லிஸ்ட்' தயாரித்து அனைத்து ஏஜென்சிகளுக்கும் வழங்கப்படும்,” என்றார்.

Advertisement