தொடர்ந்து கடினமாக உழைப்பேன்: ஸ்டாலின் மருமகன் 'திடீர்' அறிக்கை

18

சென்னை: 'மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து, தொடர்ந்து கடினமாக உழைப்பேன்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகனும், 'பென்' வியூக வகுப்பு நிறுவனத்தின் நிறுவனருமான சபரீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட தோல்விக்கு, 'கட்சியின் வியூக வகுப்பு நிறுவனமான 'பென்' முக்கிய காரணம்' என, கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், 'பென்' நிறுவனரான சபரீசன் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் முடிவு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை, 'பென்' கவனிக்கிறது. இவற்றை பொறுப்புடனும் தெளிவுடனும் பரிசீலித்து, பாடம் கற்றுக்கொள்வது மிக முக்கியம். எங்கள் கவனம் பழி சுமத்துவதில் இல்லை; கருத்துகளை கேட்பதிலும், கற்றுக் கொள்வதிலும் தான் உள்ளது.

கட்சி பணியாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்களிடமிருந்து வரும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை, ஆவலுடன் வரவேற்கிறோம். ஜனநாயகத்தில் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், பெரிய அரசியல் முடிவை, ஒரே கதைக்குள் சுருக்கி விடுவது பயனளிக்காது.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்களின் தீர்ப்பை கண்ணியத்துடன் எதிர்கொள்வது எப்படி என்பதை, செயல்பாட்டால் காட்டினார். கொளத்துார் தொகுதிக்கு சென்று, மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அவரை பின்பற்றி, 'பென்' நிறுவனம், தன் குறைகளை புரிந்து கொள்ளவும், புதிய நோக்கத்துடன் வளர்ச்சி அடையவும் முன்னோக்கிச் செல்லும். மக்களின் எதிர்பார்ப்புகளை ஆழமாக புரிந்து கொண்டு, தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement