திண்டிவனத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள்... அடாவடி!புதிய பஸ் நிலையத்திற்கு வராமல் புறக்கணிப்பு
திண்டிவனம்: திண்டிவனத்தில், நகராட்சி சார்பில் 27.51 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் திறந்து 3 மாதங்களைக் கடந்த நிலையில், பெரும்பாலான அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வராததால், பொதுமக்கள், பஸ் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டிவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மேம்பாலத்தின் கீழ்பகுதி பஸ் நிலையமாக அடிப்படை வசதி ஏதுமின்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
திண்டிவனத்திற்கு நிலையான பஸ் நிலையம் வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, கடந்த தி.மு.க., ஆட்சியில்தான் பொது மக்களின் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு, 27.51 கோடி ரூபாய் செலவில் திண்டிவனம் - சென்னை சாலையில் நகராட்சிக்கு சொந்தமான 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.
இந்த பஸ் நிலையத்தை கடந்த பிப்ரவரி 4ம் தேதி, அப்போதிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி மூலம் திறப்பு விழா நடந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து, பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வரும் என எதிர்பார்த்த நிலையில் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே வந்தது. நாளடையவில் முற்றிலும் குறைந்து, பஸ் நிலையம் வெறிச்சோடியது.
பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் கட்டப்பட்ட 67 கடைகளை போட்டி போட்டிக் கொண்டு கவுன்சிலர்கள் மற்றும் கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் 3 லட்சம் வரை வைப்பு தொகை கட்டியும், மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக்கு எடுத்திருந்தனர்.
இருப்பினும், தற்போது 7 கடைகள் மற்றும் வாகன பார்க்கிங் ஸ்டாண்டு, கட்டணக் கழிவறை உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டது. பஸ்கள் வரத்து இல்லாததால் கடைகள் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
பஸ் வருகை குறைவானதைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, தற்போது ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் வந்து செல்கிறது.
புதுச்சேரியிலிருந்து திண்டினம் வழியாக திருவண்ணாமலை, செஞ்சி, காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் அனைத்து பஸ்களும், திண்டிவனம் மேம்பாலத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு, பஸ் நிலையம் வராமல் செல்கிறது.
இதேபோல் திருச்சி, கும்பகோணம், மதுரை, கோயம்புத்துார், சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பயணிகளை இறக்கிவிட்டு, புதிய பஸ் நிலையம் வராமல் செல்கின்றன.
திண்டிவனம் நகராட்சி கமிஷனர் பானுமதி சார்பில் புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் வருகையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், சப் கலெக்டர், வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
புதிய பஸ் நிலையத்தில் கடைககளை வாடகைக்கு எடுத்தவர்கள் கடையை திறக்காமல் இருப்பதால், நகராட்சிக்கு தேவையில்லாமல் வாடகை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சி புதிய பஸ் நிலையத்திற்கு அனைத்து அரசு பஸ்களும் வந்து செல்வதற்கு கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால்தான், இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.
பேட்டி
போலீஸ் பூத் அமைக்க நடவடிக்கை தேவை நகராட்சி புதிய பஸ்நிலையம் திறந்து 3 மாதங்களை கடந்த நிலையில், பஸ் நிலையத்திற்கு பெரும்பாலான அரசு பஸ் வருவதில்லை. இதனால் பயணிகள் வருகை குறைந்து விட்டது, நகராட்சி கடைகளை எடுத்துள்ளவர்கள் பலர் வாடகைகை மட்டும் கொடுத்து விட்டு, பூட்டியே வைத்துள்ளனர். புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் பூத் இல்லாமல் இருப்பதால், பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
-ரேணுகா இளங்கோவன்,
17 வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர்.
அரசு பஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை தேவை புதிய பஸ் நிலையம் திறப்பு விழா சமயத்தில் அரசு பஸ்கள் வந்தது. அதன் பிறகு பஸ்கள் வருவது குறைந்து விட்டது. பஸ்கள் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல போக்குவரத்து அதிகாரிகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. பஸ் நிலையத்திற்கு வராமல் செல்லும் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பெரும்பாலன பஸ்கள் நின்று செல்வதால், பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி கடைகளை எடுத்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-எத்திராஜ்,
பா.ஜ., மாவட்ட துணை தலைவர்.
திண்டிவனம்.
கலெக்டர் தலையிட வேண்டும் பஸ் நிலையம் திறக்கப்பட்டு 3 மாதங்களைக் கடந்தும், அரசு பஸ்கள் வருவதில்லை. பஸ் நிலையத்திற்கு நம்பி வரும் பயணிகள், போதுமான வழித்தடங்களுக்கு பஸ்கள் இல்லாமல் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்கள் வராமல் செல்வது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சத்தீஷ்குமார்,
காங்., பொறுப்பாளர்
திண்டிவனம் நகரம்.
மேலும்
-
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் சாதனை
-
மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி
-
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை
-
சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
-
பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்