மின் விளக்குகள் பழுதானதால் மறைமலை நகர் மக்கள் அவதி

மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதிகளில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரியாததால் அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.

மறைமலை நகர் சிப்காட் பகுதியில் 250க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.

இதை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

இங்குள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மறைமலை நகர் நகராட்சி சார்பில், தெருவிளக்குகள் மற்றும் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த விளக்குகள் அனைத்தும் பழுதடைந்து 3 மாதங்கள் ஆகின்றன. இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதிகளில் கூட போதிய வெளிச்சம் இல்லாத சூழல் உள்ளது. சிப்காட் செல்லும் காமராஜர் சாலை, முத்துராமலிங்கத்தேவர் சாலைகளில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன.

காட்டாங்கொளத்துார், கீழக்கரணை பகுதிகளிலும் இதே நிலை தொடர்கிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கடந்த வாரம் கூடலூர் ஏரிக்கரை பகுதியில் விளக்குகள் எரியாததால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். எனவே விளக்குகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மறைமலை நகர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 2,202 சுழல் விளக்குகள், 535 சோடியம் விளக்குகள், 2703 சி.எப்.எல், விளக்குகள், 3,662 எல்.இ. டி., விளக்குகள், 108 உயர்கோபுர மின் விளக்குகள் என மொத்தம் 9,210 விளக்குகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு பகுதிகளில் எரியாத மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement