கும்மிடிப்பூண்டியில் வீட்டு மனை பட்டா கேட்டு வருவாய் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில், ரயில்வே நில ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது வீடுகளை இழந்தவர்களுக்கு, வீட்டு மனை வழங்கக்கோரி, கும்மிடிப்பூண்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் கரிமேடு, பைபாஸ், திடீர் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகள் இருந்தன.

மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதிகளில் இருந்த, 330 ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகள் அகற்றப்பட்டன.

வீடுகளை இழந்த, 90 குடும்பத்தினருக்கு பாப்பானகுப்பம் கிராமத்தில், 1,000 சதுர அடி பரப்பளவு வீட்டு மனைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள குடும்பத்தினருக்கு வீட்டு மனை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கும் உடனடியாக வீட்டு மனைகள் வழங்க வேண்டும் எனக்கோரி, கோட்டக்கரையில் உள்ள, கும்மிடிப்பூண்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கும்மிடிப்பூண்டி போலீசார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானம் செய்தனர். கடைகள் மற்றும் காலி நிலம் வைத்திருந்தவர்களுக்கு வீட்டு மனை வழங்கப்படவில்லை என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

இருப்பினும், வீடுகளை இழந்த பலருக்கு வீட்டு மனை வழங்கப்படவில்லை எனக்கூறி, ஆக்கிரமிப்பு வீடுகள் இருந்ததற்கான ஆதாரமாக, ரயில்வே துறை சார்பில் வழங்கிய நோட்டீசை காண்பித்தனர்.

இதைத் தொடர்ந்து, ரயில்வே துறை வழங்கிய நோட்டீஸ் அடிப்படையில், வீடு வைத்திருந்தவர்களுக்கு மட்டும் வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிகாரிகளிடம் மனுக்களை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement