சத்தி ரோட்டில் 1.2 கி.மீ. நிலம் எடுப்பது எப்போது?

கோவை: கோவை - சத்தி ரோட்டில் கணபதி பஸ் ஸ்டாப் பகுதியிலும், ஆவராம்பாளையம் செல்லும் திருப்பத்திலும் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பீக் ஹவர்ஸ் நேரங்களில் பல கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதற்கு தீர்வு காண, டெக்ஸ்டூல் முதல் சூர்யா மருத்துவமனை திருப்பம் வரை 1.2 கி.மீ. துாரத்துக்கு ரோடை அகலப்படுத்த வேண்டும்.

இதற்கு ஏற்கனவே திட்டமிட்டு, நில அளவீடு செய்யப்பட்டது. உள்ளூர் திட்ட குழும நிதியும் ஒதுக்கப்பட்டது. இதே வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப் போவதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. ஒரே இடத்தில் இரண்டு முறை நிலம் கையகப்படுத்துவதற்கு பதிலாக, ஒரே நேரத்தில் தேவையான நிலத்தை முழுமையாக எடுக்கலாம் என மாநகராட்சி சர்வே செய்து, ரூ.154 கோடிக்கு திட்ட அறிக்கை அனுப்பியது. மெட்ரோ ஒப்புதல் அளித்தது.

நிதியை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதனால், சத்தி ரோடு விரிவாக்கப் பணி கிடப்பில் போடப்பட்டது. தமிழக அரசு திருத்திய திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு மீண்டும் அனுப்பி, ஒப்புதல் பெறுவதற்கு இன்னும் எத்தனை மாதங்களாகும் என தெரியாது.

இச்சூழலில், டெக்ஸ்டூல் முதல் சரவணம்பட்டி வரை ரோட்டை மேம்படுத்த ரூ.51 கோடியை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கியுள்ளது. முதல்கட்டமாக மழை நீர் வடிகால் கட்டப்படுகிறது. டெக்ஸ்டூல் - சூர்யா மருத்துவமனை வரை மேம்படுத்த, மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்திக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில், தேசிய நெடுஞ்சாலை துறை காத்திருக்கிறது.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட போது, ''சத்தி ரோட்டில் 1.2 கி.மீ., துாரத்துக்கு நிலம் கையகப்படுத்த அளவீடு செய்து அறிக்கை கொடுத்து விட்டோம். நிலம் கையகப்படுத்த தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement