சூறாவளி காற்றுக்கு துாக்கி வீசப்பட்ட சோலார் பேனல்கள்

காரியாபட்டி: காரியாபட்டியில் பலத்த சூறாவளி காற்று வீசியதில் ஓட்டலில் இருந்த சோலார் பேனல்கள் துாக்கி வீசப்பட்டதில் ரோட்டில் விழுந்து, ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

காரியாபட்டியில் நேற்று மாலை 4:00 மணிக்கு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றுக்கு மதுரை – துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள ஓட்டலில் அமைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்கள் மொத்தமாக துாக்கி வீசியதில் நடுரோட்டில் விழுந்தது.

அந்த நேரத்தில் வாகனங்களோ, ஆட்களோ செல்லாததால் பெரும் விபத்து, உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வழியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்று வழிக்கு அனுப்பப்பட்டன. கன்டெய்னர் லாரிகள் வந்ததால் திரும்பி செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட துாரம் வாகனங்கள் வரிசையில் நின்றன.

பின் மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் சோலார் பேனல்களை அகற்றி போக்குவரத்து சரி செய்யப்பட்டது. கனமழைக்கு ஆங்காங்கே மரங்கள் முறிந்து ரோட்டில், மின் கம்பத்தில் விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது.

Advertisement