படப்பை இரட்டை கொலை வழக்கு: 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் சிக்கினர்

படப்பை: படப்பை அருகே மாணவர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 சிறுவர்கள் உட்பட கொலையாளிகள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

படப்பை அருகே வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரத், 22, சீனு, 23. நண்பர்களான இருவரும், குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரியில், டிப்ளமா இன்ஜினியரிங் படித்து வந்தனர். துக்க நிகழ்ச்சிகளுக்கு கானா பாடல்களை பாடி வந்தனர்.

கடந்த சனிக்கிழமை இரவு, ஒரகடம் பகுதியில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கானா பாடல் பாடிய பின், இருவரும் படப்பை அருகே ஒரத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மணம்பாக்கத்தில், நண்பர் லோகேஷ் என்பவரின் வீட்டில் தங்கினார்.

இந்நிலையில், 17ம் தேதியன்று இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேர் கும்பல், பரத், சீனு ஆகிய இருவரையும் வெட்டி கொலை செய்து தப்பி சென்றது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முடிச்சூரைச் சேர்ந்த ரவுடி குமரவேல், 20, வேலன், 19, பல்லாவரத்தைச் சேர்ந்த அய்யப்பன், 26, புதுபெருங்களத்துாரைச் சேர்ந்த கலைச்செல்வம், 20, படப்பையைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என, ஏழு பேரை, போலீசார் (மே 19) கைது செய்து விசாரிக்கின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

குமரவேலுக்கும், கொலையான பரத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால், பரத், குமரவேலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, குமரவேலுடன் சுற்றித்திரிந்த 16 வயது சிறுவனை தொடர்பு கொண்ட பரத், குமரவேலை கொலை செய்ய அவன் இருக்கும் இடத்தை காட்ட வேண்டும் என மிரட்டியுள்ளார்.

பயந்துபோன அந்த சிறுவன் குமரவேலிடம் கூறியுள்ளார். இதையடுத்து, குமரவேல் தன் நண்பர்களுடன் சேர்ந்து, பரத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பரத்தை வெட்டும்போது, தடுக்க வந்த அவரது நண்பர் சீனுவையும் அந்த கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement