புழல் அருகே பஸ் மோதி விபத்து: தாய் கண்முன் 8 வயது மகன் பலி

சென்னை: புழல் அருகே பேருந்து மோதி, தாய் கண்முன் 8 வயது மகன் உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை புழல் அடுத்த கதிர்வேடு, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவநாதன், 44; தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி பிரியா. இவர்களது மகன் நரேன் தேஜா, 8.

பிரியா நேற்று காலை 10:00 மணியளவில், தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் மகன் நரேன் தேஜாவை, கதிர்வேடு விநாயகபுரம் வழியாக டியூஷனுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

ரெட்டேரி, கதிர்வேடு மேம்பாலத்தின் கீழ் வளைவில் திரும்பும் போது, செங்குன்றத்தில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற தடம் எண்: 242 மாநகர பேருந்து, ஸ்கூட்டரின் பக்கவாட்டில் உரசியது. இதில் நிலை தடுமாறிய பிரியாவும் அவரது மகனும் கீழே விழுந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில், பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக பலியானான்; பிரியா காயத்துடன் உயிர் தப்பினார்.

தாய் கண்முன்னே மகன் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான வியாசர்பாடி பணிமனையைச் சேர்ந்த பாலகணேஷ், 30 என்பவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement