பிறதுறைகளில் பணியமர்த்தும்படி டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்

மதுரை: ‘‘மதுரை மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளின் ஊழியர்களுக்கு, கல்வித் தகுதிக்கேற்ப பிறதுறைகளில் பணிநியமனம் வழங்க வேண்டும்’’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தலைவர் சிவக்குமார், பொன்ராஜ், சுந்தரமகாலிங்கம் உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் 51 மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்பட உள்ளன. மதுரை தெற்கு மாவட்டத்தில் 38 கடைகளில் 13 கடைகள் மூடப்பட்டன. இதில் பணியாற்றிய மேற்பார்வையாளர்கள் 17 பேர், விற்பனையாளர்கள் 42 பேர், உதவி விற்பனையாளர்கள் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக மூடப்பட்ட கடை ஊழியர்கள் மேற்பார்வையாளர்கள் 17 பேர், விற்பனையாளர்கள் 22 பேர், உதவி விற்பனையாளர் ஒருவரும் பாதித்துள்ளனர்.

இதேபோல வடக்கு மாவட்டத்திலும் இதுவரை 3 கடைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் 13 பேர் பாதித்துள்ளனர். இவர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசின் பிறதுறைகளில் மாற்றுப்பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தர பணியாளராக அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement