நடுவுல கொஞ்சம் பாலத்தை காணோம்

மேலுார்: காமாட்சிபுரத்தில் பெரியாறு பிரதான கால்வாயின் ஒருபுறம் மேலுாரில் இருந்து மறுபுறம் உள்ள 8 கிராமங்களுக்கு கால்வாய் மீதான சிதிலமடைந்த பாலம் வழியாக செல்வதால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

கள்ளந்திரி முதல் குறிச்சிப்பட்டி வரை பெரியாறு ஒரு போக பாசனத்திற்கு 12-வது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இதில் காமாட்சிபுரத்தில் கால்வாயில் மேல் பகுதியில் 110 ஆண்டுகளுக்கு முன் பாலம் அமைக்கப்பட்டது.

இப்பாலம் சிதிலம் அடைந்துள்ளது. இவ் வழியாக கால்வாயின் ஒருபுறம் மேலுாரில் இருந்து மறுபுறம் செட்டியார்பட்டி, தாமரைப்பட்டி, ஒத்தப்பட்டி உள்பட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.

வேறு பாதை வழியாக கிராமங்களுக்குச் செல்ல பல கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டும். எனவே பாலம் வழியாக பள்ளி வாகனங்கள், கலப்பை தொழிற்சாலை, கொள்முதல் நிலையம் செல்லும் வாகனங்கள் உட்பட பலவும் செல்கின்றன.

பாலத்தின் மேல் பகுதியில் இரு புறமும் உள்ள சுவர் உடைந்து விழுந்ததால் வாகனங்களில் செல்வோர் பாலத்தை அச்சத்துடனும், வெளிச்சம் இல்லாததால் உயிர்பயத்துடனே கடக்கின்றனர். கால்வாயினுள் வாகனங்கள் கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படும் முன் நீர்வளத்துறையினர் பாலத்தை பராமரிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement