முதல்வர் விஜய் போட்டோ வைக்க மறுப்பு; அடம் பிடிக்கிறார் கோவை தி.மு.க., மேயர்

36

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தன் அறையில், முதல்வர் விஜய் போட்டோவை வைக்க மறுப்பு தெரிவித்து, கோவை தி.மு.க., பெண் மேயர் அடம் பிடிப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில், அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் முதல்வர் விஜய் போட்டோ வைப்பதற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்து, செய்தி - மக்கள் தொடர்பு துறையால், முதல்வர் விஜய் போட்டோ அனுப்பி வைக்கப்பட்டது. கோவை மாநகராட்சியில், கமிஷனர், துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கூட்டரங்குகளில் விஜயின் புகைப்படம் மாட்டப்பட்டது.

மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர்கள், மண்டல தலைவர்களுக்கு மாநகராட்சி அலுவலகத்திற்குள் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். துணை மேயர் வெற்றிச்செல்வன் தன் அறையில், முதல்வர் விஜய் புகைப்படம் வைப்பதற்கு, எவ்வித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

ஆனால், மேயர் ரங்கநாயகி, அவரது அறையில் முதல்வர் படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். முதல்வரை அவமானப்படுத்தும் வகையில், மேயரின் உதவியாளர் விஜயகுமார் இருக்கைக்கு மேல், சிறிய படம் தொங்க விடப்பட்டது.

அதே நேரம், மேயர் அறைக்குள் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் அமைச்சர்கள் நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் படங்கள் உள்ளன.

மேயர் ரங்கநாயகியிடம் கேட்டதற்கு, ''எனக்கு ஒதுக்கிய அறையில், எங்கள் கட்சி தலைவர்கள் படங்களை எடுக்க முடியாது. அவர்களை பார்த்தால், புத்துணர்ச்சி கிடைக்கும்.

''முதல்வரின் புகைப்படத்தை, அறைக்கு முன் வைத்திருக்கிறோம். 2027 ஜன., வரை எனக்கு பதவி காலம் இருக்கிறது. அதுவரை என் அறைக்குள் முதல்வர் விஜய் படம் வைக்க மாட்டேன்,'' என்றார்.

இதேபோல், மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்களின் அறைகளிலும், முதல்வர் விஜய் புகைப்படங்களை வைக்க, ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement