குடிநீர் பிரச்னைக்கு தீர்வுதந்த கோடை மழை * தொட்டிகளை சுத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு

மதுரை: மதுரை மாவட்டத்தில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய கோடை மழையால் குடிநீர் பிரச்னை எதுவும் எழவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை பெரிய அளவில் பெய்யாததால் கண்மாய், குளங்கள் வறண்டன. கொட்டாம்பட்டி, மேலுார் ஒன்றிய பகுதியில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண அலுவலர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி 2 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுத்தனர். மாவட்டத்தில் மொத்தம் 2900 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளன. குளோரினேட் முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் விசாலாட்சி கூறியதாவது: குடிநீர் பிரச்னை வரும் என எதிர்பார்த்து முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டன. நிலத்தடி நீர் குறைந்து வந்த நிலையில், சமீபத்திய கோடை மழையால் நிலத்தடி நீர் ஓரளவு மேம்பட்டுள்ளது. இதனால் பிரச்னை எதுவும் எழவில்லை. கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் மேடான பகுதியில் குடிநீர் செல்லாத நிலையில் லாரிகளில் சப்ளை செய்யப்படுகிறது.

குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்துகின்றனர். குடிநீர் குழாய் பழுது தொடர்பாகவோ, மின்சாரம் தொடர்பாக பிரச்னைகளை வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்து உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது என்றார்.

Advertisement