வீட்டில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம்; சர்ச்சையில் தவெக பெண் எம்எல்ஏ

32

கோவை: கவுண்டம்பாளையம் த.வெ.க., எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ் அதிகாரிகளை வீட்டுக்கு வரவழைத்து, ஆய்வுக் கூட்டம் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் த.வெ.க., எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ். இவர் தனது சமூக வலைதளத்தில், கவுண்டம்பாளையம் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து, துாய்மை பணிகளை தீவிரப்படுத்துவது, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, நிர்வாக நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என, வலியுறுத்தினேன் என, குறிப்பிட்டு இருந்தார்.அரசு அதிகாரிகளை எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ், வீட்டுக்கு அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தியதாக சர்ச்சை எழுந்தது.

கூட்டத்தில், அதிகாரிகளை பிளாஸ்டிக் சேர்களில் அமர வைத்துவிட்டு, எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ், சோபாவில் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து சமூக வலை தளங்களில் எம்.எல்.ஏ., கனிமொழியை விமர்சனம் செய்து பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.

இது குறித்து எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ் மற்றும் அவருடைய கணவர் சந்தோஷ் குமார் ஆகியோரை தொடர்பு கொண்ட போது, அவர்களுடைய மொபைல் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ், தனது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், துடியலுாரில் உள்ள கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அலுவலகம் இன்னும் தயாராகவில்லை.

இதனால் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள என்னுடைய ஜோதிட அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து வருகிறேன். அதிகாரிகளை டீசன்ட்டான சேர்களில் அமர வைத்து தான் பேசினேன். யாரையும் வரவழைத்து நான் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. முதல்வர் விஜய் பெயருக்கு களங்கம் விளைவிக்கவில்லை என, வீடியோ வடிவில் பதிவிட்டிருந்தார்.

Advertisement